தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் பாட்னா மாநிலத்திற்கு சடலத்தை ஏற்றிச் சென்று திரும்பிய போது குளத்தில் குளித்த போது மூழ்கி பலி
அதே ஆம்புலன்சில் பிணமாக கொண்டு வரப்பட்ட சோக சம்பவம்
பல்லடத்தை அடுத்த மங்கலம் ஊராட்சிக்குட்பட்ட உப்புத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 38). இவர் திருப்பூர் மாவட்டம் -பெருமாநல்லூர் பகுதியில் தனியார் ஆம்புலன்சில் கடந்த 7 வருடங்களாக ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி சைபுனா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். இந்நிலையில் பாட்னா மாநிலம்,சரண் மாவட்டம்,மர்கூரா,தேனுகி கிராமத்தைச் சேர்ந்த 17 வயதுள்ள பாலகுமார் என்பவர் பொள்ளாச்சியில் இறந்து விட்டார். பாலகுமாரின் சடலத்தை பொள்ளாச்சியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலமாக பாட்னா மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்காக கடந்த 23-ந் தேதி அபுதாகீர் பொள்ளாச்சி சென்றார். அங்கிருந்து பாலகுமார் உடலை ஆம்புலன்சில் கொண்டு சுமார் 2 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் பயணம் செய்து பாட்னா சென்றார். அபுதாஹிருடன் கோவையை சேர்ந்த மற்றொரு ஆம்புலன்ஸ் டிரைவர் சேக் மொய்தீன் என்பவரும் உடன் சென்றார். 65 மணி நேர பயணத்திற்கு பிறகு கடந்த 26 -ந்தேதி காலை 7 மணிக்கு பாட்னாவில் உள்ள வீட்டில் சடலத்தை இறக்கி விட்டு தமிழகம் திரும்பியுள்ளனர். அங்கிருந்து சுமார் 80 கி.மீ தூரம் வந்த நிலையில் சாலையோரத்தில் இருந்த பேக்கரியில் தேநீர் அருந்த ஆம்புலன்சை நிறுத்தி உள்ளனர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றனர். குளத்தில் குளித்து கொண்டி ருந்த போது அபுதாஹிர் எதிர்பாராதவிதமாக மூச்சு திணறி குளத்திற்குள் மூழ்கினார். உடனே குளத்தில் மூழ்கியவரை மீட்ட சேக்மொய்தீன் மற்றும் அங்கிருந்த சிலர் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அபுதாஹிர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.அருகில் இருந்த அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.பின்னர் அபுதாஹிரின் உடல் சேக் மொய்தீனீடம் ஒப்படைக்கப்பட்டது. சேக் மொய்தீன் ஆம்புலன்சில் அபுதாகீர் உடலுடன் திருப்பூருக்கு புறப்பட்டார். 3 நாள் பயணத்திற்குப் பிறகு நேற்று அதிகாலை அபுதாகீரின் சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் -மங்கலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் அபுதாகீரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.