விருத்தாசலத்தில் மகளிர் காங்கிரஸ் கட்சி நடை பயணத்திற்கு அனுமதி மறுப்பு
போலீசார் காங்கிரஸ் கட்சியினர் இடையே வாக்குவாதம்
விருத்தாசலத்தில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் காங்கிரஸ் சார்பில் விருத்தாசலம் அய்யனார் கோவில் தெருவில் உள்ள காந்தி சிலையிலிருந்து பஸ் நிலையம் வரை பெண்களுக்கு 33 % இட ஒதுக்கிட்டு மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி யும், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தியும் நடைபயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு விருத்தாசலம் போலீசார் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் மகளிர் காங்கிரஸ் கட்சியினர் விருத்தாசலம் அய்யனார் கோவில் அருகே திரண்டனர். அப்போது மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் லாவண்யா தலைமையில் நடைப்பயணம் தொடங்கியது. முன்னதாக காங்கிரஸ் கட்சி நகரத் தலைவர் ரஞ்சித் குமார் வரவேற்றார். மாநில தலைவர் ஹசீனா சையத், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் ராதா கிருஷ்ணன் எம்எல்ஏ, என்.வி செந்தில்நாதன், திலகர் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். . அப்போது அங்கு வந்த விருத்தாசலம் துணை போலீஸ் சூப்பிரண்டு கிரியா சக்தி தலைமையிலான போலீசார் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நடை பயணம் செல்லக்கூடாது. போக்குவரத்து பாதிக்கப்படும், 300 மீட்டர் வரை மட்டுமே நடை பயணத்திற்கு அனுமதிக்கப்படும் என்றார். ஆனால் அதனை மீறி விருத்தாசலம் கடைவீதி வரை நடை பயணம் தொடர்ந்தது. அப்போது போலீசார் அவர்களை தடுத்ததால் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கடைவீதியில் நடைபயணமாக சென்ற மகளிர் காங்கிரசாரை, போலீசார், கயிற்றால் தடுத்து, வலுக்கட்டாயமாக வாகனத்தில் ஏற்றினர். அப்போது மாநில தலைவர் ஹசினா சையத் திடீரென சாலையில் அமர்ந்து நாங்கள் அமைதியான முறையில் நடை பயணம் செல்கிறோம், ஏன் எங்களை தடுக்கின்றீர்கள் என கேட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் மகளிர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் மகிளா காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.