மங்கலம்பேட்டை போலீஸ் நிலையத்தை அதிமுகவினர் முற்றுகையிட்டு போராட்டம்
அ.தி.மு.க. பிரமுகரை பீர் பாட்டிலால் தாக்கியவர்களை கைது செய்யக்கோரி நடந்தது
விருத்தாசலம் அடுத்த மங்கலம் பேட்டை மாரியம்மன்கோயில் தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகன் ராதாகிருஷ்ணன் (வயது.55), அ.தி.மு.க., பிரமுகர். இவரும், அவரது உறவினரான கோணாங்குப்பம் கிராமத்தை சேர்ந்த கோபால் மகன் செல்வராசு என்பவரும் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் கோணாங்குப்பத்தில் உள்ள கிருஷ்ணர் கோயிலுக்கு சென்று விட்டு, மங்கலம்பேட்டைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, கர்னத்தம் கிராமம் அருகே உள்ள ஒரு ரைஸ்மில் அருகில் வந்தபோது, எம்.அகரம் கிராமத்தை சேர்ந்த அரியமுத்து மகன் அசோக், பா.ஜ.க., பிரமுகர் தமிழ்செல்வன், திமுக பிரமுகர் திருஞானம் ஆகியோர் அங்கு நின்றுகொண்டு, முன் விரோதம் காரணமாக, ராதாகிருஷ்ணனை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததுடன், உடைந்த பீர் பாட்டிலால் அசோக் ராதாகிருஷ்ணன் கையில் குத்தியதில், பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, பலத்த காயமடைந்த ராதாகிருஷ்ணன் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து, மங்கலம் பேட்டை போலீசார் அசோக், தமிழ்செல்வன், திருஞானம் ஆகிய 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வழக்குப் பதிவு செய்து 4 நாட்களாகியும், குற்றவாளிகளை கைது செய்யாமல் மங்கலம்பேட்டை போலீசார் வேண்டுமென்றே கால தாமதம் செய்து வருவதாகவும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி இன்று மங்கலம்பேட்டை பேரூர் அ.தி.மு.க. செயலாளர் பாலமுருகன் தலைமையில், முன்னாள் நகர செயலாளர் அப்பாதுரை, வி.எம். சாலி, ஏழுமலை, கோமதி, அக்பர் ஷா, அருண், குபேரன், பிரேமா கண்ணன், அக்பர் பாஷா உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் மங்கலம்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். இது குறித்து, இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன், சப் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி, விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததன் பேரில், அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.