சிவகங்கை தேசிய நெடுஞ்சாலைப் பணியில் குளறுபடி

சிவகங்கை மாவட்டம், திருப்புத்துாரில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரால் மேற்கொள்ளப்படும் சாலை விரிவாக்கப்பணி சரியான திட்டமிடல் இன்றி பல குளறுபடிகளுடன் நடப்பதாக பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Update: 2024-09-01 07:02 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்புத்துார் நான்கு ரோடு முதல் தம்பிபட்டி வரையிலான ரோடு தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டதால் ரோட்டில் விரிவாக்கப்பணி நடக்கிறது. இந்த பணி தேசிய நெடுஞ்சாலை தொழில்நுட்ப அளவிற்கு இல்லை என்று பொதுமக்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். ரோட்டின் வளைவு பகுதி குறுகலாக உள்ளதால் விபத்து நடைபெறுகிறது. இந்த ரோட்டில் கூடுதலாக நில ஆர்ஜிதம் செய்து விரிவாக்கம் செய்யாமல், பழைய ரோட்டின் இரு புறமும் உயரமான வடிகால் அமைக்கின்றனர். இதனால் ரோட்டின் அகலம் மேலும் குறைந்து போக்குவரத்து நெருக்கடி அதிகரிக்கும் நிலை உருவாகும்.பல தெருக்களின் குறுக்கு சாலைகள் இந்த ரோட்டை சந்திக்கின்றன. தெருக்களின் சாலை மட்டத்தை விட கட்டப்பட்டுள்ள வடிகால் மட்டம் அதிகமாக உள்ளது. சில தெருக்களில் ரோட்டிற்கு சமமாக வடிகால் உயரம் அமைக்கப்பட்டுள்ளது. நடுத்தெரு, வெள்ளாளர் தெரு, வாத்தியார் தெருக்களுக்கு வடிகால் ரோட்டை விட உயரமாக உள்ளது. இதனால் ஏற்படும் விபத்து அபாயத்தை தவிர்க்க தெருச்சாலை சந்திப்புகளில் புதிய ரோட்டின் மட்டத்திற்கு வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டுமென மக்கள் கோரியுள்ளனர்.மேலும் இந்த ரோட்டில் பால வேலைகளிலும் சரியான திட்டமிடல் இல்லை. தம்பிபட்டியில் ரோட்டில் உள்ள குடிநீர் தொட்டியை வேறு இடத்திற்கு மாற்றாமல் பாலப் பணி நடக்கிறது. மேலும் தொட்டிக்காக அப்பகுதி பாலத்தின் அகலத்தை குறைத்துள்ளனர். ரோட்டோர மழை நீர் வடிகாலுக்கும் பாலத்திற்கும் இடைவெளி உள்ளது. ரோட்டில் கட்டப்பட்டுள்ள வடிகால் வரை பாலத்தை நீட்டிக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் சாம்பாண் ஊரணி அருகில் கட்டப்பட்டுள்ள பாலத்தின் மேற்கே ஊருணி தடுப்புச்சுவர் ரோட்டிற்குள் வருமாறு கட்டப்பட்டுள்ளது. இதனாலும் விபத்து அபாயம் காணப்படுகிறது. இதனைத் தவிர்க்க பாலத்திற்கு நேர் கோட்டில் ஊரணி தடுப்புச்சுவர் கட்டி ரோட்டை நேராக்க வேண்டியது அவசியமாகும்.

Similar News