நடப்போம் நலம் பெறுவோம் திட்டத்தின் கீழ் நடை பயிற்சி
சிவகங்கை மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், “நடப்போம் நலம் பெறுவோம்” (Health Walk) திட்டத்தின் கீழ் நடைபெற்ற நடை பயிற்சியினை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் துவக்கி வைத்து, பொதுமக்களுடன் நடை பயணம் மேற்கொண்டு சிறப்பித்தார்.
சிவகங்கை மாவட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் சார்பில், “நடப்போம் நலம் பெறுவோம்” (Health Walk) திட்டத்தின் கீழ் இன்று (01.09.2024) மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவுவாயில் பூங்கா அருகில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் நடை பயிற்சியினை துவக்கி வைத்து, பொதுமக்களுடன் நடை பயணம் மேற்கொண்டார் பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் உடல்நலத்தினை சரிவர பேணிகாத்திடும் பொருட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில், பொதுமக்களிடையே தினமும் நடப்பதை ஒரு பழக்கமாக மாற்றும் நோக்கில் “நடப்போம் நலம் பெறுவோம்” (Health Walk) என்ற திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் பொது மக்கள், மக்கள் பிரதிநிதிகள், சுகாதார பணியாளர்கள் ஆகியோர்கள் இணைந்து, மொத்தம் 8 கீ.மி நடைபயிற்சி மேற்கொள்ள திட்டமிடப்பட்டு, “நடப்போம் நலம் பெறுவோம்” (Health Walk) என்ற திட்டத்தினை அறிவித்து, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான சிறப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மேற்கொண்டுள்ளார் இத்திட்டத்தின் கீழ் முன்னதாக, காரைக்குடி பகுதியில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, சிவகங்கையிலும் இன்றைய தினம்“நடப்போம் நலம் பெறுவோம்” (Health Walk) திட்டத்தின் கீழ் நடைபயிற்சி நிகழ்ச்சியானது சிறப்பாக நடைபெறுகிறது. அதில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் பூங்கா அருகில் நடைப்பயிற்சியானது தொடங்கப்பட்டு, மொத்தம் 8 கி.மீ தூரம் வரை நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொருட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட நீதிமன்றம், ஆக்ஸ்போர்ட் பள்ளி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், BSNL அலுவலகம், அறிவுசார் மையம் வழியாக மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயில் பூங்கா அருகில் வந்தடைந்து, அதேபோன்று, இரண்டாம் சுற்றும் மேற்கொள்ளும் பொருட்டு நடைப்பயிற்சி நிகழ்ச்சியானது நடைபெற்றது. உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் 10 ஆயிரம் அடிகள் அதாவது 8 கீ.மி தினமும் நடப்பதால், சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த நோய்கள் 28 சதவீதமும், இதயநோய் தாக்கம் 30 சதவீதமும் குறைகின்றது என்று அறியப்படுகிறது. மேலும், நடைபயிற்சியானது நம்மை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும், நாள்பட்ட உடல் நல பிரச்சனைகள் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. நடப்பது குறைந்து, உடற்பயிற்சி இல்லாததால் தற்போது தொற்றா நோய்கள் அதிகரித்து வருகின்றன. எனவே நடப்பதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் எனும் நோக்கில் இத்திட்டமானது சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவ்வாறு மேற்கொள்ளப்படும் நடைபயிற்சியின் இறுதியில், ஆரோக்கியமான வாழ்க்கை நலவாழ்வு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுத்திடவும், அதில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களின் உடல் நலத்தினை பேணிக்காத்திடும் பொருட்டு, அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் இதுபோன்ற திட்டங்களை பொதுமக்கள் கருத்தில் கொண்டு, அதில் தங்களுடைய பங்களிப்பினை முழுமையாக அளித்து, அதனை முறையாக பின்பற்றி அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சிவராமன், மாவட்ட சுகாதார அலுவலர் விஜய்சந்திரன், நடைபயிற்சி சங்க பிரதிநிதிகள், மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.