பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாள் பேச்சுப்போட்டிகள்
சிவகங்கையில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப்பள்ளிகள் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே நடைபெறவுள்ளது
சிவகங்கை மாவட்டம், தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 11.09.2024 புதன்கிழமையன்றும், தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 12.09.2024 வியாழக்கிழமையன்றும் சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் அனைத்துப்பள்ளிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் (பதின்மப் பள்ளிகள் உள்பட) பயின்று வரும் மாணாக்கர்களுக்கும் (6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு முடிய) மற்றும் அனைத்துக் கல்லூரிகளில் (அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் கலைக்கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் முதலியன) பயின்றுவரும் மாணாக்கர்களுக்கும் தனித்தனியே மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் சிவகங்கை மருதுபாண்டியர் நகர், அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியருக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000/- மும், இரண்டாம் பரிசாக ரூ.3,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.2,000/- மும் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப்பள்ளி மாணாக்கர்கள் இருவரை மட்டும் தெரிவு செய்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2,000/- மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கபெற உள்ளது. 11.09.2024 மற்றும் 12.09.2024 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ள பேச்சுப் போட்டிகளில், பள்ளி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டிகள் முற்பகல் 9.00 மணியளவில் தொடங்கியும், கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப்போட்டிகள் பிற்பகல் 2.00 மணியளவில் தொடங்கியும் நடத்தப்பெற உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் செயற்பட்டுவரும் பள்ளிகள், கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியர் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்க முடியும். இவ்விரு போட்டிகளுக்கான விதிமுறைகள் (தலைப்புகளுடன்) பங்கேற்புப் படிவங்கள் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் /கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு அனுப்பப்பெற்றுள்ளன. மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள மாணாக்கர்கள் உரிய பங்கேற்புப் படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர் / கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் ஒப்பமும் பெற்று சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளித்து போட்டிகளில் பங்கேற்கலாம். கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயற்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ, அல்லது 04575-241487 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.