கடன் வாங்கிய பெண் வீட்டை உடைத்து பொருட்களை அள்ளிச் சென்றதால் பரபரப்பு
சிவகங்கை கடன் வாங்கிய பெண் வீட்டை உடைத்து பொருட்களை அள்ளிச் சென்ற நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கடன் வாங்கிய பெண்ணின் வீட்டை உடைத்து பொருட்களை அள்ளிச் சென்ற நபர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். காரைக்குடி கீழ ஊரணி தெற்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா மனைவி வாசுகி(44)வாசுகி தனது குடும்பத் தேவைக்காக கண்ணங்குடி அருகே உள்ள கச்சக்குடியை சேர்ந்த ராமசாமி மகன் கணேசன் என்பவரிடம் ரூ.9 லட்சம் பெற்றுள்ளார். இதற்காக பவர் பத்திரம் ஒன்றையும் கணேசனுக்கு வாசுகி வழங்கியுள்ளார். இந்த பத்திரத்தை பயன்படுத்தி கணேசன், வீட்டை வேறு ஒருவருக்கு கிரையமாக்கிக் கொண்டதோடு வீட்டை காலி செய்யும்படி வாசுகியை தொந்தரவு செய்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் வாசுகி புகார் அளித்துள்ளார். இந்நிலையில், வாசுகியின் வீட்டில் யாரும் இல்லாத போது கணேசன் அவரது உறவினர்கள் 20 பேருடன் வந்து வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் சரக்கு வாகனத்தில் ஏற்றிச் சென்றுள்ளார். வாசுகியின் கணவர் கருப்பையா அவரது நண்பரான மைக்கேல் ராஜ் ஆகியோரை கணேசன் உறவினர்கள் தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். வாசுகி கொடுத்த புகாரின் பேரில் காரைக்குடி தெற்கு போலீசார் அள்ளிச் சென்ற பொருட்களை மீண்டும் சரக்கு வாகனம் மூலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். கணேசன் உட்பட 20 க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.