கருவேப்பிலங்குறிச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
போலீசாரை கண்டித்து நடந்தது
விருத்தாசலம், செப்.4- கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் பாசிக்குளம் கிராமம் பாஸ்கரன் என்பவரின் வீட்டிற்கு சென்று அராஜகத்தில் ஈடுபட்டு பாஸ்கரனை ஜாதியை சொல்லித் திட்டு பொய் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்பிய கருவேப்பிலங்குறிச்சி உதவி ஆய்வாளர் சிவராமன் மற்றும் போலீசாரை கண்டித்தும், அவர்கள் மீது வன்கொடுமை தடை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்ய வலியுறுத்தியும், மரணம் அடைந்த பாஸ்கரன் குடும்பத்திற்கு ரூபாய் 25 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வலியுறுத்தியும், மரணம் அடைந்த பாஸ்கர் மனைவிக்கு அரசு வேலை வழங்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. திட்டக்குடி வட்ட செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு ராஜேந்திரன், விருத்தாசலம் வட்ட செயலாளர் கலைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாதவன், மாநில குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, மாவட்ட செயற்குழு ஆறுமுகம், மாவட்ட செயற்குழு ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார்கள். இதில் நிர்வாகிகள், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.