நிலப் பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல்
கொடைக்கானலில் நிலப் பிரச்சனை காரணமாக தனது குடும்பத்தாருக்கு கொலை மிரட்டல் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி பாதிக்கப்பட்ட பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலை நாயுடுபுரத்தை சேர்ந்தவர் குமரன் அவரது மனைவி சூர்யா. சூர்யாவின் உறவினர் கஷ்மீர் செல்வனுக்கு சொந்தமான 2 ஏக்கர் 34 செண்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து சூர்யா தனது கணவருடன் சேர்ந்து கடந்த 15 வருடங்களாக கேரட், பீட்ரூட், பூண்டு போன்றவை விவசாயம் செய்து வருகின்றார். இந்நிலையில் கொடைக்கானலைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் சிவக்குமார் என்பவர் காஷ்மீர் செல்வனுக்கு சொந்தமான நிலம் அருகே உள்ள நிலத்தை விலைக்கு வாங்கி அந்த நிலத்தை வேறொரு நபரிடம் விற்பனை செய்துள்ளார். மேலும் தனது உறவினர் காஷ்மீர் செல்வம் நிலத்தை அபகரிக்க சிவக்குமார் மற்றும் அவரது அண்ணன் மகன் ஆகியோர் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவக்குமார் மற்றும் அவரது அண்ணன் மகன் மணிகண்டன் மீது சூர்யா கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் விவசாய நிலத்தை விட்டு விட்டு ஓடி விடுமாறு தங்களைத் தொடர்ந்து மிரட்டி வருவதாகவும், மேலும் கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி இருந்தார். ஆனால் புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர் இது குறித்து பலமுறை கேட்டும் காவல் நிலையத்தில் உரிய பதிலளிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர். இதனை அடுத்து இது தொடர்பாக சூர்யா கொடைக்கானல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவின் படி சிவக்குமார் மற்றும் மணிகண்டன் உட்பட 6 பேர் மீது கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால் அவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனிடையே சிவக்குமார் மற்றும் மணிகண்டன் கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்களை தொடர்ந்து மிரட்டி வருவதாகவும் தனக்கும் தனது கணவர் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சூர்யா புதன்கிழமை மதியம் 1 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து காவல்துறை கண்காணிப்பாளர் பிரதிபிடம் புகார் அளித்தார்.