பாசன வாய்க்காலில் தூர் வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை!
மருதூர் கீழக்காலில் பாசன வாய்க்காலில் நிரம்பிய மண்ணை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் மருதூர் கீழக்காலில் பாசன வாய்க்காலில் நிரம்பிய மண்ணை தூர்வார வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட பொருளாளர் நம்பிராஜன் மாவட்ட ஆட்சியருக்கு விடுத்துள்ள கோரிக்கை மனு: தாமிரபரணி ஆழவார்கற்குளம், மருதூர் கீழக்கால் 25ல் நேரடி பாசனத்தில் கொங்கராயகுறிச்சி, தெற்கு தோழப்பப் பண்ணை பகுதி விவசாயிகள் 1500 ஏக்கரில் நெல், வாழை விவசாயம் செய்து வந்தார்கள். அப்பொழுது கடந்த டிசம்பர் மாதம் 17,18 தேதிகளில் பெய்த கனமழை வெள்ளத்தில் நேரடி மடை வாய்க்காலில் மண் நிரம்பி இருப்பதால் விவசாயத்திற்கு தண்ணீர் வரமுடியாத நிலைமை இருந்து வருகிறது. இந்த வாய்க்காலில் நிரம்பிய மண்ணை தூர்வாரிட வேண்டுமென்று அப்பகுதி மக்கள் பொதுபணித்துரை அதிகாரியிடம் பலமுறை மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் பொதுபணி துறை இதை பற்றி கண்டு கொள்ளவில்லை. ஆகவே மாவட்ட ஆட்சித்தலைவர் தலையீடு செய்து இன்னும் இரண்டு மாதங்களில் விவசாயிகள் விவசாயம் செய்ய இருப்பதால் வாய்காலில் நிரம்பிய மண்ணை தூர்வாரி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளார்.