விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம்
அதிகாரிகள் பங்கேற்பு
விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு கோட்டாட்சியர் சையத் மெக்மூத் தலைமை தாங்கினார். கோட்டாட்சியின் நேர்முக உதவியாளர் செல்வமணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர் உள்ளிட்ட தாலுக்காக்களை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை தெரிவித்தனர். குறிப்பாக விவசாய நிலங்களில் விலங்குகள் தொந்தரவு செய்வதை கட்டுப்படுத்த வேண்டும். மாதம் ஒரு நாள் நடக்கும் இந்த கூட்டம் முறையாக விவசாயிகளுக்கு அழைப்பு கொடுப்பது இல்லை. இதனால் விவசாயிகள் அதிக அளவில் கூட்டத்தில் பங்கு பெற முடியவில்லை. அவ்வாறு அழைப்பு கொடுக்கும்போது ஒரு நாள் முன் செல்போனில் தகவல் கொடுப்பதால் தெரிந்துகொள்ள முடியவில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னரே தகவலை தெரிவிக்க வேண்டும். அதிகாரிகளும் சரிவர கூட்டத்திற்கு வருவதில்லை. மேலும் தொடர்ந்து கூட்டங்கள் நடைபெறுகிறது ஆனால் கூட்டங்களில் கொடுக்கும் மனுக்களுக்கு மட்டும் தீர்வு கிடைப்பதில்லை என பல்வேறு குற்றசாட்டுகளையும் கோரிக்கைகளையும் விவசாயிகள் முன் வைத்தனர். அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் ஒவ்வொரு கோரிக்கைகளுக்கும் அந்தந்த துறை அதிகாரிகள் பதில் அளித்தனர். விவசாயிகள் தெரிவித்த கோரிக்கைகள், புகார்களை உடனே நிவர்த்தி செய்யும்படி அதிகாரிகளுக்கு கோட்டாட்சியர் சையத் மெக்மூத் உத்தரவிட்டார். முன்னதாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் யாரும் வராததால் கூட்டத்தை விட்டு வெளியேறுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதனையடுத்து கோட்டாட்சியர் ஒவ்வொரு துறை அதிகாரிகளுக்கும் போன் மூலம் தகவல் தெரிவித்து கூட்டத்திற்கு வருமாறு கடுமையாக எச்சரித்தார் அதன் பின்பு அனைத்து துறை அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக கூட்டம் தொடங்குவதற்கு முன்பு சில நிமிடங்கள் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இதில் விவசாயிகள் வயலூர் சுரேஷ், சின்னக்கண்டிங்குப்பம் கந்தசாமி, குப்புசாமி, கலியமூர்த்தி, பரவலூர் பாலு உள்ளிட்ட விவசாயிகள் மற்றும் ஊராட்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வனத்துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, ஊரக வளர்ச்சி துறை, நகராட்சி, மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.