கள்ளக்குறிச்சியில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், 100 சதவீத எழுத்தறிவை நோக்கி என்ற தலைப்பில் மண்டல அளவிலான புதிய பாரத எழுத்தறிவு கொண்டாட்ட நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு சி.இ.ஓ., கார்த்திகா தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்கள் ரேணுகோபால், ஜோதிமணி, துரைராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியை பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இணை இயக்குனர் பொன்குமார் துவக்கி வைத்து பேசினார். இதில் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத படிக்க தெரியாத அனைவருக்கும் அடிப்படை எழுத்தறிவுக் கல்வி வழங்கிட வேண்டும். அவர்களில் படித்து தேர்ச்சி பெற்றவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் ஊக்குவிக்க வேண்டும் என, எடுத்துரைக்கப்பட்டது. இதில் கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த உதவித் திட்ட அலுவலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் தன்னார்வலர்கள், ஆசிரியர்கள், கற்போர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.