ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Update: 2024-09-25 06:27 GMT

ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

வாலாஜாபாத் பேரூராட்சி வெள்ளேரியம்மன் கோவில் பகுதியில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அரசு சார்பில் தூர்வாரி சீரமைக்கும் குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி குளம் விரிவுபடுத்த அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.




 


காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் பேரூராட்சிக்கு உட்பட்ட 1-வது வார்டில், வெள்ளேரியம்மன் கோவில் தெற்கு புது தெருவில் அரசு சார்பில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் குளம் தூர்வாரி சீரமைத்தல் பணி நடைப்பெற்று வருகிறது.

இந்த குளம் பல ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 70 சென்ட் பரப்பளவில் இருந்த நிலையில் காலப்போக்கில் ஆக்கிரமிப்புகளால் குறுகி தற்போது வெறும் 25 சென்ட் பரப்பளவில் மட்டும் குளம் தூர்வாரும் பணியை அரசு செய்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும், குளத்தை சுற்றி அருகில் உள்ள குடியிருப்பு வாசிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதால் குளத்துக்கு தண்ணீர் செல்ல கால்வாய் வசதி இல்லாமலும், கால்நடைகள் மற்றும் பாதசாரிகள் நடக்கவும் வழியின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ளும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டங்களில் அந்த பகுதி மக்கள் பலமுறை மனு அளித்தும் இதுவரை குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், குளம் விரிவுபடுத்தி சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

எனவே, வெள்ளேரியம்மன் கோவில் தெற்கு புது தெருவில் உள்ள குளத்தை விரிவுபடுத்தி சீரமைக்கவும், குளம் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News