திருச்செங்கோடு மோரூர் கரடு துப்புரவு காலனி பகுதியைச் சேர்ந்தவர் சண்முக மூர்த்தி (50) திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் தற்காலிக இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கு பழனியம்மாள் என்ற மனைவியும் 22 வயதில் ஒரு மகனும் 17 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இவரது மகள் கல்லூரிக்குச் சென்றவர் வீடு திரும்ப வரவில்லை என்பதால் மகளைக் காணவில்லை என திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு வீட்டுக்கு சென்ற போது அந்தப் பகுதியில் உள்ள குறுகிய சாலையில் தனது டிவிஎஸ் 100 இருசக்கர வாகனத்தில் சென்ற சண்முக மூர்த்தி மீது எதிரில் வந்த கிரேன் வாகனம் மோதி கீழே விழுந்தவர் மீது கிரேன் வாகனம் ஏறி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சண்முக மூர்த்தி உயிர் இழந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் பிரேதத்தை கைப்பற்றி திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து திருச்செங்கோடு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.அந்தப் பகுதியில் சாலை குறுகலாக இருப்பதாலும் ஒரு பகுதி கட்டிடம் மற்றொரு பகுதி சாலையை மறைத்திருப்பதாலும் எதிரில் வரும் வாகனங்கள் குறித்து தெரியாமல் அடிக்கடி அந்த பகுதியில் விபத்து நடப்பதாகவும் உடனடியாக வேகத்தடுப்புகள் அமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.