திருப்பூரில் நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை பொதுமக்கள் தள்ளி சென்ற வீடியோ வைரல்!
திருப்பூரில் நடுரோட்டில் பழுதடைந்து நின்ற அரசு பேருந்தை போலிசார் பொதுமக்கள் உதவியுடன் தள்ளிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரல்!
நடுரோட்டில் பழுதடைந்து நின்ற அரசு பேருந்து. போலீசார் பாதுகாப்புடன் ஒரு கிலோமீட்டர் தூரம் பொதுமக்கள் பேருந்தை தள்ளிச் சென்ற வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. திருப்பூர் தென்னம்பாளையம் பகுதி போக்குவரத்து நெரிசல் நிறைந்த பகுதியாக உள்ளது. நேற்று இந்த வழியாக திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் நோக்கி சென்ற அரசு நகர பேருந்து சாலையின் நடுவே பழுதாகி நின்றது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக பேருந்தை சாலை ஓரம் தள்ளி நிறுத்திவிட்டு அரசு போக்குவரத்து கழகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பேருந்தை சரி செய்ய வந்த நபர்களாலும் பேருந்தை இயக்க முடியாததால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட துவங்கியது இதனைத் தொடர்ந்து போலீசார் பாதுகாப்புடன் பொதுமக்கள் உதவியுடனும் அரசு பேருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு தள்ளி சென்று பழுது நீக்க பணிமனையில் விடப்பட்டது. போலீசார் உதவியுடன் பொதுமக்கள் அரசு பேருந்து தள்ளிச் செல்வது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. போக்குவரத்து பணிமனையில் உள்ள அதிகாரிகள் அலட்சியப்போக்குடன் செயல்படுவதாலும் முறையான உபகரணங்களை பேருந்துக்கு மாற்றி கொடுக்காததால் இது போன்ற நிலை ஏற்படுவதாக அரசு பேருந்து ஓட்டுநர்கள் வேதனை தெரிவித்தனர்.