அடிக்கடி பழுதாகும் ஏ.டி.எம் அவதிப்படும் பொதுமக்கள்
அடிக்கடி பழுதாகும் ஏடிஎம் இயந்திரம். வாடிக்கையாளர்கள் கடும் அவதி.
ஆர்.கே.பேட்டை, அக்.4: சின்ன நாகபூண்டி கிராமத்தில் இயங்கி வரும் யூனியன் வங்கி ஏ.டி.எம். இயந்திரம் அடிக்கடி பழுதாவதால், வாடிக்கையாளர்கள் பணம் எடுக்கவும், போடவும் முடியாமல் இன்று கடும் அவதிப்பட்டனர்.
ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சின்ன நாகபூண்டி கிராமத்தில் யூனியன் வங்கி இயங்கி வருகிறது. வங்கியில் பெரியநாகபூண்டி, மரிகுப்பம், விபிஆர்.புரம், தேவலாம்பாபுரம், நேசனூர், பெரியராமாபுரம், மயிலார்வாடா, கொடிவலசா உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட குக்கிராம மக்கள் கணக்கு துவங்கியுள்ளனர்.
வாடிக்கையாளர்களின் வசதிக்காக யுனியன் வங்கி நிர்வாகம் வங்கி முன்பு ஏடிஎம். சேவை தொடங்கியது. கடந்த சில மாதங்களாக வாரத்தில் 3 நாட்கள் இயந்திரம் பழுதடைந்து விடுகிறது. இதன் காரணமாக, வாடிக்கையாளர்கள், பணம் எடுப்பதற்கும், பணம் டிபாசிட் செய்யவும் சிரமப்படுகின்றனர்.
குறிப்பாக, வங்கி விடுமுறை தினங்களில் அவதிப்படுகின்றனர். பென்ஷன் பெறும் முதியோர், வங்கி வளாகத்தில் ஏ.டி.எம்., செயல்படாததால், 10 கிலோ மீட்டர் துாரம் உள்ள மற்றொரு ஏ.டி.எம். மையமான சோளிங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இந்நிலையில் நேற்று ஏ.டி.எம் பழுதானதால் பணம் எடுக்க வந்த வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க, போட முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.
எனவே, வங்கி வளாகத்தில் உள்ள ஏ.டி.எம்., மைய பழுதை உடனடியாக சரி செய்து மூடிக்கிடக்கும் ஏ.டி.எம்.திறக்க, வங்கி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.