புகையிலை தர மறுத்ததால் தனியாருக்கு சொந்தமான மதுபான விடுதியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளைஞர் கொலை.
பனியன் நிறுவன தொழிலாளிகள் இரண்டு பேர் கைது.
பல்லடம் அருகே அருள்புரத்தில் தனியாருக்கு சொந்தமான திருப்பூர் ரிலாக்ஸ் ஸ்போர்ட்ஸ் அண்ட் சோசியல் வெல்ஃபேர் கிளப் என்ற மதுபான விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கூடுதலாக மதுபான பார் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு மது அருந்த வந்த இளைஞர் ஒருவர் கொடூரமான முறையில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார். நேற்று காலை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கவே பல்லடம் காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ், காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பூபாலன் என்பதும் இவர் பல்லடம் அருகே குன்னாங்கல்பாளையம் பகுதியில் உள்ள டீக்கடையில் பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளி யார் என்றும் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் நாகப்பட்டினத்தை சேர்ந்த விஜய் மற்றும் அந்தியூரை சேர்ந்த சரவணன் ஆகிய இருவரும் கரைப்புதூர் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் அருள்புரத்தில் உள்ள தனியார் மதுபான விடுதியில் குடித்து விட்டு வெளியே வரும் போது மதுபோதையில் இருந்த பூபாலனிடம் புகையிலை கேட்டுள்ளனர். இதில் பூபாலன் இருவருக்கும் புகையிலை தர மறுத்துள்ளார். இந்நிலையில் பூபாலன் மற்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் பூபாலன் விஜய் மற்றும் சரவணனை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும்,இதில் ஆத்திரம் அடைந்த இருவரும் பூபாலனை அருகில் இருந்த கல்லை எடுத்து தலையில் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து விஜய் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் தப்பி சென்று தலைமறைவாகி உள்ளனர். இதனையடுத்து கரைப்புதூர் பகுதியில் தலைமறைவாக இருந்த விஜய் மற்றும் சரவணனை தனிப்படை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புகையிலை கேட்டு தர மறுத்ததால் தலையில் கல்லால் அடித்து கொலை செய்து பனியன் நிறுவன தொழிலாளிர்களை போலீசார் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.