அடிப்படை வசதிகள் செய்து தர கோரி சாலையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்த போலீசார்.
பல்லடம் அடுத்த மாதப்பூர் செந்தில் நகர்,லட்சுமி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் ரோடு அமைத்து தரக்கோரி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில், மூன்று நாட்களாக பெய்த மழையால் சாலை முழுவதுமாக துண்டிக்கப்பட்டு பள்ளி குழந்தைகள், வேலைக்கு செல்வோர் சாலையை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது உடனடியாக சர்வீஸ் ரோடு அமைத்து தர கோரி அப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இருசக்கர வாகனங்களை சாலையில் வரும் வாகனங்களை தடுப்பதற்காக வழிமறித்து நிறுத்தி இருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் ஆய்வாளர் லெனின் அப்பாதுரை தலைமையிலான பல்லடம் போலீசார் மாதப்பூர் பகுதிக்கு விரைந்து சென்று தேசிய நெடுஞ்சாலைகள் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பெண்கள் உட்பட 15க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மேலும் சாலையின் குறுக்கே நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்து சென்றுள்ளனர்.