சிவன்மலையில் குவியல் குவிலாக ஊசிகள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள்

சிவன்மலை கிரிவலப்பாதையில்  குவியல் குவியலாக ஊசிகள், மருந்து பாட்டில்கள் மற்றும் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள் பக்தர்கள் அதிர்ச்சி

Update: 2024-10-16 15:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருப்பூர் மாவட்டம், காங்கேயம்,சிவன்மலையில் பிரசித்தி பெற்ற சுப்ரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.இந்நிலையில் மலையின் கிரிவல பாதையில் பயன்படுத்தப்பட்ட பல ஆயிரக்கணக்கான ஊசிகளும் குவியல் குவியலாக போடப்பட்டு சிதறிக் கிடக்கின்றன. மேலும் பயன்படுத்தப்பட்ட ஊசி மருந்துகளும், தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகளும் வீசப்பட்டுள்ளது. இவற்றை யார் இங்கு கொண்டு வந்து போட்டது யார்,  என்பது  தெரியாமல் பக்தர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்றது. இந்த கோவில் அடிவாரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கிரிவலப் பாதை அமைந்துள்ளது. இந்த கிரிவலப்பாதையில் பௌர்ணமி,அமாவாசை,கிருத்திகை,சஷ்டி போன்ற தினங்களில் காலையும்,மாலையும் பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். மேலும் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள "ஹெல்த் வாக் " என்ற நடைப்பயிற்சியும் ஞாயிற்று கிழமைகளில் பொதுமக்கள்,அரசு ஊழியர்கள், அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள்,விளையாட்டு வீரர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இங்கு நடை பயிற்சியில் ஈடுபடுவார்கள். மேலும் இரவு நேரங்களில் மதுப்பிரியர்கள் மதுப்பாட்டில்களை வாங்கி வந்து குடித்துவிட்டு பாட்டில்களை சாலை ஓரத்தில் வீசிச் செல்வது உள்ளிட்ட  செயல்களில் ஈடுபட்டு கோவிலின் புனிதத்தை கெடுத்து வருவது தொடர்கதையாக உள்ளது. இந்த நிலையில் கிரிவலப்பாதையில் கீரனூர் சாலை பிரியும் இடத்திற்கு அருகில் உள்ள ஊராட்சிக்குட்பட்ட குடிநீர் மோட்டார் அறை அருகே பல்லாயிரக்கணக்கான  பயன்படுத்திய ஊசிகள், மருந்து பாட்டில்கள்,தடை செய்யப்பட்ட குட்கா பாக்கெட்டுகள், மருத்துவக் கழிவுகளை கொட்டி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயன்படுத்தபட்ட ஊசிகள் போதைக்காக பயன்படுத்தப்பட்டதா, எதனால் ஆள் நடமாட்டம் இல்லாத மலையின் கிரிவலப்பாதையில் வீசப்பட்டுள்ளது. ஒருவேளை போலி மருத்துவர்கள் யாராவது பயன்படுத்திவிட்டு இங்கு கொட்டி விட்டு செல்கின்றனரா? என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளது. மேலும் இதே பகுதியில் தான் தமிழ்நாடு அரசு அறிவித்த மாவட்ட விளையாட்டு மையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் இங்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வரும் விளையாட்டு வீரர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதுடன் பக்தர்களை முகம் சுளிக்க வைக்கிறது என்கின்றனர். இது குறித்து பக்தர்களின் கோரிக்கையாக மலையின் கிரிவலப்பாதையில் சிசிடிவி பொருத்தி சமூகவிரோதிகளை கண்டறிய வேண்டும்  என்கின்றனர். இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும், ஊராட்சி நிர்வாகமும்,இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவிக்கின்றனர்.

Similar News