இரவு முழுவதும் பெய்த கனமழையினால் மூல வைகையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வருசநாடு, செங்குன்றம், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
தேனி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான மேகமலை, வெள்ளிமலை, அரசரடி, பொம்முராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழை நீர் நீரோடைகளாக மாறி மூல வைகையாக உருவெடுக்கிறது. இப்பகுதியில் தடுப்பணைகள் எதுவும் இல்லாததால் மழை பெய்யும் நேரங்களில் மட்டுமே மூல வைகையில் நீரோட்டம் இருக்கும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இப்பகுதியில் மழை இல்லாததால் மூல வைகை வறண்டே கிடந்தது. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு லேசான மழைப்பொழிவு இருந்ததால் நீர்வரத்து தொடங்கியது.தொடர்ந்து மழை இருந்து வந்த நிலையில் நேற்று இரவு கனமழையாக உருவெடுத்தது. இதனால் வருசநாடு, செங்குன்றம், மயிலாடும்பாறை, கடமலைக்குண்டு உள்ளிட்ட பல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மூல வைகை ஆறு அம்மச்சியாபுரம் எனும் இடத்தில் முல்லை பெரியாற்றுடன் கலந்து வைகை அணைக்கு செல்கிறது. இதனால் மூலவைகையினால் வைகை அணைக்கு பூஜ்ஜிய நிலையில் இருந்த நீர் வரத்து நேற்று வெகுவாய் அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வைகை அணைக்கு விநாடிக்கு 970 கன அடியாக இருந்த நீர் வரத்து நேற்று 1,500 கன அடியாக உயர்ந்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் தற்போதைய நீர்மட்டம் 58அடியாக உள்ளது. விநாடிக்கு 869 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.