முதியவர்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்.
முதியோர்கள் தங்கள் உடல் நலத்தில் கவனம் செலுத்தி, ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியுடனும் வாழ வேண்டும். நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மாவட்ட அளவிலான முதியோர் குழுக்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சியில் பேச்சு.
நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான முதியோர் குழுக்களை சிறப்பிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடும்ப மற்றும் சமுதாய வளர்ச்சியில் முதியோரின் பங்கை அங்கீகரிக்கவும், அவர்களின் வாழ்வில் கண்ணியத்தை காக்கவும் மற்றும் பிரச்சனைகளை வெளிகொணர்ந்து சரிசெய்யவும் உலக முதியோர் தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் 1 தேதி உலக அளவில் கொண்டாடப்படுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 754 முதியோர் குழுக்களில் 4,545 உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதரா இயக்கத்தின் மூலம் ஆதார நிதியாக ஒரு குழுவிற்கு ரூ15,000/- வீதம் 430 முதியோர் குழுக்களுக்கு ஆதார நிதி வழங்கப்பட்டுள்ளது. முதியோர் குழுக்களில் உள்ள உறுப்பினர்கள் மேற்கொண்டு வரும் வாழ்வாதார செயல் மேம்பாட்டிற்காக ஒரு குழுவிற்கு ரூ1,00,000/- வழங்கப்படுகிறது. இதுவரை 51 முதியோர் குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ51.00 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு நிதியிலிருந்தும், வங்கிகளிலும் இருந்தும் வாழ்வாதார செயல்பாடுகளில் ஈடுபடும் முதியோர் குழுக்களுக்கு கடன் இணைப்பு பெற்று தரப்படுகிறது. முதியோர்கள் தங்களுக்கு பிடித்ததை செய்து மன மகிழ்ச்சியுடனும், இயற்கை உணவுகளை உட்கொண்டு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். இன்றைய காலத்தில் உணவு பழக்க வழக்கங்கள் பெரிய அளவில் மாறி உள்ளதால் பல்வேறு உடல் நல குறைபாடுகள் ஏற்படுகிறது. நீங்கள் உங்களால் முடிந்தவாறு ஆடு, கோழி வளர்ப்பு மற்றும் சிற்றுண்டி கடை போன்ற சுய தொழில் செய்து வருவாய் ஈட்டி மன மகிழ்ச்சியுடன் வாழ வேண்டும். இன்றைய வாழ்க்கை முறையில் தங்களுக்கு இருக்க ஓர் பாதுகாப்பான இடம், உண்ண உணவு, உடை, மருத்துவம் இவையே முக்கியம். முதியோர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் அனைத்து விதமான சிகிச்சைகளும் நவீன வசதிகளுடன் தரமாக வழங்கப்படுகிறது. எனவே, தங்கள் உடல்நிலையை பரிசோதனை செய்து தேவையான சிகிச்சை பெற்று நோயின்றி வாழ வேண்டும். தங்கள் பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக வாழ வேண்டும். தங்கள் அனைவருக்கும் எனது தீபாவளி பண்டிகை வாழ்த்துகள் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். தொடர்ந்து, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் உலக முதியோர் தினத்தை முன்னிட்டு, மாவட்ட அளவிலான முதியோர் குழுக்களை சிறப்பிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் முதியோர்களுக்கு சால்வை அணிவித்து, பரிசுகளை வழங்கினார். மேலும், சிறப்பாக செயல்பட்டு வரும் 16 மாவட்ட அளவிலான முதியோர் குழுக்களை சிறப்பித்தார். இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, முதியோர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.