திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் ஆலய கொடியேற்றம்

மயிலாடுதுறையில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவது தலமுமான திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோயிலில் பிரசித்தி பெற்ற காவிரி துலா உற்சவத்தை முன்னிட்டு இன்று கருடக்கொடி ஏற்றப்பட்டது. திரளான பக்தர்கள் வழிபாடு

Update: 2024-11-07 06:56 GMT
மயிலாடுதுறையில் காவிரி ஆற்றை மையப்படுத்தி ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் நடைபெறும் காவிரி துலா உற்சவம் உலக பிரசித்தி பெற்றதாகும். குறிப்பாக கடைசி பத்து நாட்கள் நடைபெறும் விழாவில் மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற சைவ, வைணவ ஆலயங்களில் இருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பாடு செய்யப்பட்டு காவிரி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறையில் அமைந்துள்ள பழமைவாய்ந்த திருஇந்தளூர் பரிமள ரெங்கநாதர் கோவிலில் இன்று துலா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், பஞ்ச அரங்கத் தலங்களில் ஐந்தாவது தலமுமான இக்கோவிலில், சிறப்பாக நடைபெற்ற கொடியேற்றும் நிகழ்வில், பரிமள ரெங்கநாதர் உற்சவ மூர்த்திகள் கோயில் பிரகாரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருள செய்யப்பட்டார். தொடர்ந்து, பட்டாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்வித்து மகாதீப ஆராதனை காண்பித்தனர். தொடர்ந்து துலா உற்சவ விழாவுக்கான தொடக்கமாக கருட கொடி ஏற்றப்பட்டது. இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர். கடை முக தீர்த்தவாரியின் சிகர நிகழ்வாக பத்தாம் தேதி கருட வாகனத்தில் ஓலைச் சப்பர வீதி உலாவும், 13-ஆம் தேதி திருக்கல்யாணமும், 15 ஆம் தேதி காலை தேரோட்டமும் நடைபெற உள்ளது.

Similar News