அரசு மருத்துவமனை திறந்திட சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புதிதாக கட்டப்பட்டு பயன்பாட்டில் இல்லாத மருத்துவமனை திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுகின்றனர்
பள்ளிபாளையம் அடுத்த நாட்டாக் கவுண்டன்புதூர் பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கும் முன்பு மத்திய நிதி குழு திட்டத்தின் மூலம் 25 லட்சம் மதிப்பீட்டில் நகர் நல மையம் சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார். முதல்வர் திறந்து வைத்த ஆரம்ப சுகாதார நிலையம் சிறிது நாட்கள் மட்டுமே செயல்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று வரை அந்த சுகாதார நிலையம் மருத்துவர்கள் சரிவர வராத காரணத்தால் திறக்கப்படாமல் மருத்துவமனை சுற்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர் மண்டி உள்ளது. மேலும் இதை பயன்படுத்திக் கொண்ட சமூக விரோதிகள் மருத்துவமனையை மது குடித்துவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். மேலும் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் இப்பகுதியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு தான் செல்ல வேண்டிய அவல நிலையும் உள்ளது. தற்பொழுது மழைக்காலம் தொடங்கி விட்டதால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள்,வயதானவர்களுக்கு அடிக்கடி உடல் உபாதைகள் ஏற்படுவதால் இப்பகுதியில் உள்ள மருத்துவமனை செயல்படுத காரணத்தால் சிகிச்சைக்காக வெகுதூரம் போகும் சூழல் உள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகின்றனர். அதிவிரைவாக மருத்துவர்களைக் கொண்டு மருத்துவமனை இயங்கவில்லை என்றால் இப்பகுதியை சார்ந்த பொதுமக்கள் மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.