ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் வீடுகளுக்கு அரசு பட்டா வழங்க கோரி சாலை மறியல்
சாலை மறியல்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சி பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் வீடுகளுக்கு அரசு பட்டா வழங்க கோரியும், நிறுத்தி வைத்துள்ள பத்திரப்பதிவை முறைப்படுத்தக் கோரியம் கீழ வடகரை ஊராட்சி மக்கள் சாலை மறியல் போராட்டம். தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கீழவடகரை ஊராட்சியில் உள்ள ஸ்டேட் பேங்க் காலனி, சுந்தர்ராஜன் நகர், ஐஸ்வர்யா நகர், கோல்டன் சிட்டி, பெருமாள்புரம் உள்ளிட்ட பகுதிகளில் 2500 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக வீடு கட்டி குடியிருந்து வரும் மக்களுக்கு இதுவரையில் வீட்டுமனை பட்டா வாங்காத நிலையில் அந்த குடியிருப்பு பகுதி முழுவதும் அரசு நிலமாக எடுத்துக் கொள்ளப்பட்டது என வருவாய்த்துறையினர் கூறினர் . அதனை தொடர்ந்து 2000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் குடியிருந்து வரும் வீடுகளுக்கு பட்டா பெற முடியாத நிலையில் உள்ளது. மேலும் வங்கிகளில் வீடு அடமான கடன் பெற முடியாத நிலையும், கட்டப்பட்ட வீடுகளை பத்திரப்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் கடந்த நான்கு மாதங்களாக மாவட்ட ஆட்சியர் மற்றும் கோட்டாட்சியரிடம் மனு அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று கீழவடகரை ஊராட்சி பொதுமக்கள் திண்டுக்கல், தேனி நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற போது பெரியகுளம் காவல்துறையினர் ஆய்வாளரின் வாகனத்தை குறுக்கே போட்டு போராட்டத்திற்கு சென்ற மக்களை தடுத்து நிறுத்தியதால் கீழவடகரை ஊராட்சி கிராம சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட கீழ வடகரை ஊராட்சி பொதுமக்கள் கூறுகையில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் வீட்டிற்கு பட்டா வழங்க வேண்டும், பத்திர பதிவுத்துறையில் பத்திரப்பதிவுகளை நடத்திட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த காவல்துறை ஆய்வாளர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அரசுக்கு உரிய முறையில் தகவல் அனுப்பி பிரச்சனையை தீர்வுக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரமாக நடைபெற்று வந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் பள்ளி செல்லும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.