மயிலாடுதுறை மாவட்டத்தில் மிதமான மழை பள்ளி கல்லூரி விடுமுறை மீன்பிடிக்க தடை
தென் கிழக்கு வங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்த நிலையில் தமிழகம், புதுச்சேரி, மாநிலங்களில் கன மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் , நாளையும் கன மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கன மழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்டா மற்றும் கடலோர மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை 8.30 மணி நிலவரப்படி மயிலாடுதுறையில் 10 மி.மீ, மணல்மேடு 4 மி.மீ, சீர்காழி 14.80 மி.மீ, கொள்ளிடம் 3 மி.மீ, தரங்கம்பாடி 22 மி.மீ, செம்பனார்கோவில் 22.80 மி.மீ. என சராசரியாக 12.93 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. கன மழை எச்சரிக்கை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 மீனவர் கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார். கடலுக்கு சென்ற மீனவர்கள் திரும்ப கரைத்திரும்படி மீன்வளத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சின்னூர்பேட்டை, தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், பெருமாள்பேட்டை, சந்திரபாடி, சின்னங்குடி, வானகிரி, பூம்புகார், திருமுல்லைவாசல், தொடுவாய், பழையார், கொடியம்பாளையம் உள்ளிட்ட 28 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. 400 விசைப்படகுகள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.