வீரபாண்டியில் வாழ்வாதாரத்தை இழந்து நடுத்தெருவில் நிற்பதாக சாலையோர கடை வியாபாரிகள் கண்ணீர்
சாலையோர கடை வியாபாரிகள்
வீரபாண்டியில் எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் சாலையோர வியாபாரிகளின் கடைகளை அத்து மீறி அகற்றி அராஜகத்தில் ஈடுபட்ட பேரூராட்சி நிர்வாகத்தினர். தேனி மாவட்டம் தேனி அருகே உள்ளது வீரபாண்டி பேரூராட்சி .பிரசித்தி பெற்ற வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் இங்கு அமைந்துள்ளது.தமிழகம் மட்டுமல்லாது பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து தினசரி சாமி தரிசனம் செய்வது வழக்கம்.மேலும் வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா உலகப் பிரசித்தி பெற்ற திருவிழாவாகும். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலில் வழிபட வருகை தந்து இங்குள்ள முல்லைப் பெரியாற்றில் நீராடி,முல்லைப் பெரியாற்றிலிருந்து நீர் எடுத்துச் சென்று கோவில் கருவறை முன்பு அமைந்துள்ள முக்கொம்பு வடிவிலான கம்பத்தில் ஊற்றுவது இங்கு முக்கிய நேர்த்திக்கடனாக பார்க்கப்படுகிறது. இதனால் முல்லைப் பெரியாறு ஆற்றுப்பகுதியில் இருந்து கோவில் வரை சாலையோரங்களில் சுமார் 50 க்கும் கடைகள் அமைந்துள்ளன.தேநீர் கடைகள், சிறிய அளவிலான ஜவுளிக்கடைகள்,பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், பிரசாதங்கள் விற்பனை செய்யும் கடைகள் என சுமார் 50 கடைகள் வரை இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவருக்கும் சாலையோர வியாபாரிகள் என்பதற்கான அடையாள அட்டை பேரூராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ளது.இந்த அடையாள அட்டைகளை வைத்து தங்களது கடைகளுக்காக ஒரு சிலர் வங்கிகள் மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றும் தொழில் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாற்றில் தற்போது நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதனால் இப்பகுதிகளில் உள்ள சாலை ஓர கடைக்காரர்கள் அனைவரும் உடனடியாக தங்களது கடைகளை மூட வேண்டும் என்றும், மறு உத்தரவு வரும் வரை யாரும் கடைகளை திறக்க கூடாது எனவும் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை சார்பாக இன்று காலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து கடைக்காரர்களும் ஒருமனதாக ஏற்றுக் கொண்ட நிலையில், இதுகுறித்து அனைவரிடமும் வீரபாண்டி காவல் நிலையத்தில் எழுதி வாங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று மாலை 4 மணியளவில் வீரபாண்டி பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பாக பேரூராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டோர் இப்பகுதிகளில் உள்ள கடைகளுக்குச் சென்று உரிமையாளர்கள் இல்லாத நிலையிலும்,கடைகளின் மேற்கூரைகள் மற்றும் சுற்றுப்புற தடுப்புகளை அகற்றியுள்ளனர். மேலும் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் சூறையாடியவர்கள் அப்பகுதியில் தூக்கி வீசி சென்றனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சாலையோர வியாபாரிகள் இதுகுறித்து கேட்டபோது,இது தேனி மாவட்ட ஆட்சியரின் உத்தரவு.ஆட்சியரின் உத்தரவுப்படிதான் செயல்படுகிறோம் என்று தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக முல்லைப் பெரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில் இன்று மாலை முதல் மழை இல்லாமல் நீரின் அளவு வெகுவாக குறைந்துள்ளது.மேலும் தற்போது அகற்றப்பட்ட கடைகள் அனைத்தும் வீரபாண்டி முல்லைப் பெரியாற்றிலிருந்து சுமார் 200 அடி தூரத்திற்கு மேல் அமைந்துள்ளது. இதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் பேரூராட்சி ஊழியர்கள் அராஜகத்தில் ஈடுபட்டு அகற்றியதால் சுமார் 50க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அகற்றப்பட்ட கடைகளுக்கும், சூறையாடப்பட்ட கடைகளுக்குள் இருந்த பொருட்களுக்கும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே இப்பகுதி சாலையோர வியாபாரிகளின் கோரிக்கையாக உள்ளது.