தாயைக்கோன்ற மகனுக்கும் தந்தைக்கும் ஆயுள்தண்டனை
மயிலாடுதுறை அருகே சொத்து தகராறில் மூதாட்டி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மூதாட்டியின் கணவர் மற்றும் மகனுக்கு ஆயுள் தண்டனை:- 87 வயது முதியவரையும், அவரது மகனையும் போலீசார் சிறையில் அடைத்தனர்;
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு காவல் சரகத்துக்கு உள்பட்ட கிடாய்த்தலைமேடு சன்னதி வடக்கு தெருவை சேர்ந்தவர் செல்லம்மாள்(76). கருத்து வேறுபாடு காரணமாக இவரது கணவன் சுப்பிரமணியன்(87) என்பவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். இவர்களுக்கு 4 மகள், 2 மகன் உள்ள நிலையில், 2-வது மகன் ராமலிங்கம்(58) என்பவர் தந்தை சுப்பிரமணியனுடன் வசித்து வந்தார். இவர்களது சொத்தை பாகப்பிரிவினை செய்வது சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, நிலம் கையப்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், 2016-ஆம் ஆண்டு மே மாதம் 8-ஆம் தேதி செல்லம்மாள் பால் வாங்குவதற்கு வீட்டுக்கு வெளியில் வந்தபோது, சுப்பிரமணியன் செல்லம்மாளை பிடித்துக்கொள்ள, அவரது மகன் ராமலிங்கம் கத்தியால் குத்தியதில் செல்லம்மாள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, அவரது மூத்த மகன் நடனசபாபதி மணல்மேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீஸார் சுப்பிரமணியன் மற்றும் ராமலிங்கம் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, செல்லம்மாளை கொலை செய்த அவரது கணவர் சுப்பிரமணியன் மற்றும் மகன் ராமலிங்கம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2,000 அபராதம் விதித்தும் அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட அரசு வழக்கறிஞர் ராமசேயோன் மற்றும் போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டினார்.