அதிமுக ஐடி பிரிவு நிர்வாகி நிர்மல்குமாரை கைது செய்ய இடைக்கால தடை

வலைதள பக்கத்தில் பொய் தகவலை பரப்பியதாக பதியப்பட்ட வழக்கில் அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியான நிர்மல்குமாரை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Update: 2024-12-19 04:09 GMT
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தபோது மெரினாவில் தேங்கிய மழைநீரில் மின்கசிவு ஏற்பட்டதாக அதிமுக ஐடி பிரிவு நிர்வாகியான சி.டி.ஆர். நிர்மல்குமார் தனது வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதையடுத்து பொய்யான தகவலைப் பரப்பியதாக அதிமுக நிரவாகியான நிர்மல்குமார் மீது சென்னை சைபர் க்ரைம் போலீஸார் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி நிர்மல்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பாக நடந்தது. அப்போது காவல்துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் வழக்கறிஞர் சந்தோஷ், 'மனுதாரரான நிர்மல்குமார் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக உறுதிப்படுத்தப்படாத பொய்யான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதை தனது வாடிக்கையாக வைத்துள்ளார். உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பதிவிட மாட்டேன் என ஏற்கெனவே நீதிமன்றத்தில் உறுதியளித்தும், தொடர்ந்து தவறான பதிவுகளை பதிவிட்டு பொதுமக்களுக்கு தேவையற்ற பீதியை ஏற்படுத்தி வருகிறார் என்றார். அதையடுத்து நீதிபதி, எந்தவொரு உறுதிப்படுத்தப்படாத, பொய்யான தகவல்களையும் தனது வலைதளப் பக்கத்தில் இனி பதிவிட மாட்டேன் என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய நிர்மல்குமாருக்கு அறிவுறுத்தி விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தார். அதுவரை நிர்மல்குமாரை கைது செய்யக்கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Similar News