அரியலூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை..
அரியலூர் நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
அரியலூர், டிச.19- அரியலூர் நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களாகவும், முக்கிய பகுதிகளாகவும், செந்துறை சாலை, மார்க்கெட் தெரு, ஜெயங்கொண்டம் சாலை மேல அக்ரகாரம் பெரம்பலூர் சாலை ஆகியவை உள்ளன. இந்த பகுதிகளில் சாலையோரம் தள்ளுவண்டி கடைகள் மற்றும் தரைக்கடைகள் அமைத்து வியாபாரம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டுகளும் அவதி அடைந்து வருகின்றனர். இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக கடந்த மாதம் நெடுஞ்சாலை துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மழை பெய்ததால் அக்கிரமிப்புகளை அகற்ற எந்த அதிகாரிகளும் வரவில்லை. அதனால் சாலையோரம் கடைகள் அமைத்திருந்த வியாபாரிகள் சிலர் தங்களது கடைகளை அகற்றியும் கொட்டகைகளையும் பிரித்தனர். ஆனால் தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு கடைகள் போடப்பட்டு வருகின்றன. இதனால் தேரடியில் மூன்று சாலைகள் சந்திக்கும் பகுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு காலையிலும், மாலையிலும் செல்லும் வாகனங்கள் அதிக அளவில் செல்லும்போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார் வேறு பணிக்கு செல்லும் போது அந்த நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. இதேபோல் இந்த சாலையோர கடைகளுக்கு வரும் பொது மக்களும் நுகர்வோர்களும் சாலையோரத்தில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். அதனால் இரண்டு வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலையை கடக்கும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. அதன் காரணமாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மாணவ, மாணவிகளும் கடும் அவதிகளை சந்தித்து வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரம் இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். அதேபோல் தற்போதும் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி பொதுமக்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்ய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.