வனத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு
நீதிமன்ற உத்தரவின் படி 10 வீடுகள் அகற்றம்
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தண்ணீர்பள்ளி சீனிவாசா நகரில் 7.5 ஏக்கர் நிலம் வனத்துறைக்கு சொந்தமான கட்டுப்பாட்டில் இருந்தது. சுமார் 57 ஆண்டுகளுக்கு முன்னர் பர்மாவில் இருந்து இங்கு வந்து குடியேறிய குடும்பத்தினர் சிலர் அந்த நிலத்தினை விவசாயத்திற்காக பயன்படுத்தியும் அங்கு வீடு கட்டியும் இருந்து வந்துள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு குளித்தலை துணை மின் நிலையம் அமைப்பதற்காக அரசுக்கு சொந்தமான நிலத்தை கையகப்படுத்தும் பொருட்டு அங்கிருந்து 5 ஏக்கர் நிலம் கோர்ட் உத்தரவுபடி ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்பட்டது. இந்நிலையில் மீதம் இருந்த 2.5 ஏக்கர் நிலத்தில் 10 குடும்பத்தினர் வீடுகள் கட்டி இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அவர்கள் குடியிருக்கும் நிலங்களும் வனத்துறையினருக்கு சொந்தமான இடம் என்பது தெரிய வந்ததை அடுத்து அந்த குடியிருப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவின் பேரில் குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் மாவட்ட வன அலுவலர் சண்முகம், மாவட்ட வனச்சரக அலுவலர் தண்டபாணி, தாசில்தார் இந்துமதி ஆகியோர்கள் முன்னிலையில் சுமார் பல கோடி மதிப்பில் கட்டப்பட்ட வீடுகளை 4 ஜேசிபி இயந்திரங்கள் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இந்த ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் வனத்துறை, காவல்துறை, வருவாய்த்துறை, மின்வாரியத்துறை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முசிறி தீயணைப்புத் துறை, அவசர ஊர்தி ஆம்புலன்ஸ் பணியாளர்களும் தயார் நிலையில் உள்ளனர். இதில் 50 க்கு மேற்பட்ட போலீசார்கள், 30 க்கும் மேற்பட்ட வனசரக ஊழியர்கள், 20 க்கும் மேற்பட்ட மின்வாரிய பணியாளர்கள், 75 க்கு மேற்பட்ட வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர்.