ஊராட்சி ஒன்றிய ஆணையரை கண்டித்து சாலை மறியல் போராட்டம்

சேர்மன் தலைமையில் அதிமுக, திமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மறியல் செய்ததால் பரபரப்பு

Update: 2024-12-19 10:39 GMT
கரூர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக கடந்த 10 நாட்கள் முன்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு எந்த ஒரு கடிதமும் இதுவரை அனுப்பாமல் இருந்துள்ளார். மேலும் இன்று கூட்டம் நடைபெறும் அலுவலக கூட்ட அரங்கில் ஒன்றிய கவுன்சிலர்கள் அமரும் இருக்கைகள் இல்லாமல் காலி சாக்கு பைகளை மூட்டைகளாக அங்கு கொ.ட்டி வைத்துள்ளனர். வருகை பதிவேடு மற்றும் தீர்மான புத்தகத்தினை தராமல் அலுவலகக் கூட்ட அரங்கை பூட்டிவிட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் இன்று விடுப்பு எடுத்துச் சென்றுள்ளார். இதை கண்டிக்கும் விதமாக குளித்தலை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் விஜய விநாயகம் தலைமையில் அதிமுக, திமுக வார்டு கவுன்சிலர்கள் ஒன்றிணைந்து யூனியன் ஆபீஸ் நான்கு ரோடு சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த குளித்தலை இன்ஸ்பெக்டர் பேச்சுவார்த்தை நடத்தி போக்குவரத்தை சரி செய்தார். இருப்பினும் குளித்தலை சார் ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வர வேண்டும் மாவட்ட ஆட்சியர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தற்காலிகமாக இந்த சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு சாலையின் ஓரமாக அமர்ந்தனர். மேலும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில் தொடர்ந்து யூனியன் ஆபீஸ் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தப்படும் என ஒன்றிய கவுன்சிலர்கள் தெரிவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்

Similar News