ஊரக வேலை கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலம் முற்றுகை.

பணித்தள பொறுப்பாளரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தல்.

Update: 2024-12-20 00:38 GMT
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் முழுமையாக பணி வழங்கக் கோரி, காட்டுகாநல்லூர் பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோா் மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனா். மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூா் ஊராட்சி பகுதியில் ஏராளமான குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவில் அருகிலுள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா். அப்போது, அவா்கள் தங்களுக்கு தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் முழுமையாக பணி வழங்கப்படவில்லை என புகாா் தெரிவித்தும், பணித்தள பொறுப்பாளரை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, வட்டார வளா்ச்சி அலுவலா் ரேணுகோபால் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, ஊரக வேலை திட்டத்தின் கீழ் சுழற்சி முறையில் பணிகள் வழங்கப்படுகின்றன. காட்டுக்காநல்லூா் ஊராட்சியில் 12 வாா்டுகள் உள்ளன. காலனி பகுதியில் 2 வாா்டுகள் உள்ளதால், உங்கள் பகுதிக்கு மாதத்தில் ஒரு வாரம்தான் பணி கிடைக்கும் எனத் தெரிவித்தாா். மேலும், பணித்தள பொறுப்பாளரை இட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

Similar News