வீரமணி பேட்டி
தமிழகம் கல்வியில் தனித்தமையுடன் உள்ளது மனுதர்மத்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது ஈரோட்டில் கி.வீரமணி பேட்டி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 14-ம் தேதி இறந்தார். இதை எடுத்து ஈரோட்டில் உள்ள அவரது வீட்டிற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் வந்து இளங்கோவன் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி இன்று காலை ஈரோட்டில் உள்ள ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் வீட்டிற்கு வந்து அவரது படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் இளங்கோவன் மனைவி வரலட்சுமி, மகன் சஞ்சய் சம்பத்திடம் ஆறுதல் கூறினார்.பின்னர் கி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- நான் ஒவ்வொரு முறையும் ஈரோட்டுக்கு வரும்போது இளங்கோவன் என்னை எதிர்கொண்டு வரவேற்பார். இன்று அவர் நம்மிடம் இல்லை. அவரது படத்திற்கு மாலை அணிவித்த நிகழ்ச்சி மிகவும் வேதனையாக உள்ளது.மிக சிக்கலான அரசியல் சூழ்நிலையிலும் துணிச்சலுடன் தனது கருத்தை மாற்றிக் கொள்ளாத உறுதி உடையவராக இளங்கோவன் விளங்கினார். அவருடைய மறைவு இழக்ககூடாத ஒருவரை இழந்ததுடன், யாராலும் நிரப்ப முடியாத ஒன்று. கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒரு பெரும் சோகம். பொது வாழ்க்கையில் அவர் சம்பாதித்தது எல்லாம் புகழ் மற்றும் பெருமை மட்டுமே. இன்று அவர் படமாக மாறிவிட்டார். கொள்கை உணர்வோடு இருக்கக்கூடிய பொது வாழ்க்கைக்கு பாடமாக உள்ளவர் இளங்கோவன். 5 முதல் 8-ம் வகுப்புகளுக்கு தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. ஆனால் தமிழக அரசு அதை பின்பற்றப் போவதில்லை என்ன கூறிவிட்டது. தமிழ்நாடு அரசு கல்வித்துறையில் தெளிவாக உள்ளது. கல்வி பட்டியல் ஒத்திசைவு பட்டியலில் உள்ளது. மத்திய அரசின் கொள்கைகளை மாநில அரசு பின்பற்ற வேண்டிய அவசியம் கிடையாது. பழைய நிலை என்னவோ அதையே தான் பின்பற்ற வேண்டும். 5-வது, 8-வது, 10-வது என தேர்வுகளை அதிகமாக வைத்து அதற்கு மேல் படிப்பை தொடர முடியாத நிலையை உருவாக்கவும், நம் கல்வி அமைப்பை தகர்ப்பதற்காகத்தான் இவர்கள் இதனை செய்கிறார்கள். இது ஆர்.எஸ்.எஸ்.ன் மறைமுக திட்டம். இதற்கு மேல் விஸ்வகர்மா திட்டங்கள் இதையெல்லாம் பின்பற்றினால் மாணவர்கள் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலை ஏற்படும். தனித்தன்மையோடு தமிழ்நாடு அரசு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சர் ஸ்டாலின் இந்த பிரச்சனையில் தெளிவாக இருக்கிறார். இந்த கொள்கையில் மாறாது. கூட்டணி தோழர்களும் இதே கொள்கையில் இருக்கின்றோம். தமிழ்நாடு தான் எல்லா துறைகளுக்கும் வழிகாட்டியாக இருக்கிறது. கல்வியில் தனித்தன்மையுடன் சிறந்து விளங்குகிறது. மனுதர்மத்தை மீண்டும் மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.