திண்டிவனம் மேம்பாலம் சீரமைப்பு பணி புதுச்சேரி செல்லும் சாலை மூடல்
மேம்பாலம் சீரமைப்பு பணி புதுச்சேரி செல்லும் சாலை மூடல்
விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் மேம்பாலத்தில் கடந்த 24ம் தேதியிலிருந்து ஜன. 10ம் தேதி சீரமைப்பு பணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 25ம் தேதி இரவு 7.00 மணிக்கு பாலத்தின் மேல்பகுதிக்கு செல்லும் நான்கு வழிகளும் மூடப்பட்டன.பொங்கல் பண்டிகை வரவுள்ள நிலையில் சாலைகளை மூடினால் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். வியாபாரம் பாதிக்கப்படும் என அனைத்து வியாபாரிகள் சப் கலெக்டர் திவ்யான்சு நிகத்திடம் முறையிட்டனர்.நேற்று காலை சப் கலெக்டர் தலைமையில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது.அதில், பாலத்தின் நான்கு வழிகளையும் மூடாமல், மேம்பாலத்தின் மேல்பகுதியிலிருந்து புதுச்சேரி செல்லும் சாலையை மட்டும் மூடிவிட்டு, ரவுண்டானா சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு சப்கலெக்டர் அறிவுறுத்தினார்.அதன்படி நேற்று மாலை 5.30 மணியளவில் புதுச்சேரி செல்லும் சாலையின் இரண்டு பகுதிகளும் மூடப்பட்டன. இதனால் பாலத்தின் மேல்பகுதியிலிருந்து புதுச்சேரி மார்க்காக வாகனங்கள் செல்ல முடியாது, அதேபோல் புதுச்சேரியிலிருந்து திருவண்ணாமலை, செஞ்சி, பெங்களூரு, வேலுார் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் பகுதி வழியாக சுற்றிக்கொண்டு செல்ல வேண்டும்.