திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது
திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில் தனியார் நிறுவனங்களுக்கான கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது.;
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சிவகாசி மாரனேரி இன்னோவெல் இன்ஜினிரிங் இண்டர்நேசனல் லிமிடெட்.(Innowell Engineering International Pvt. Ld) இணைந்து, திருக்குறளில் நிர்வாக மேலாண்மை என்ற தலைப்பில், தனியார் நிறுவனங்களுக்கான சிறப்பு கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது: திருக்குறள் குறித்து விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமான நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. திருக்குறளில் சொல்லியிருக்கக்கூடிய கருத்துக்களை இன்னும் ஆளப் புரிந்தால் அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கிறது என்று தெரியும். திருக்குறள் எத்தனை ஆண்டு தொடர்ச்சியாக படித்தாலும் அது இன்னும் படிக்க படிக்க புதிய அர்த்தங்களையும், புதிய செய்திகளையும் நமக்கு தரக்கூடிய ஒரு நூல். திருக்குறள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டிருந்தாலும், அடுத்து வந்த திருக்குறள் குறித்த ஆராய்ச்சி நூல்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் தொடர்ச்சியாக செய்யப்பட்டு திருக்குறள் எப்படி இளைய சமுதாயத்திற்கு, தனிமனிதனுக்கு நிர்வாக மேலாண்மைக்கு எப்படி பொருந்துகிறது என கூறுகிறது. திருக்குறளின் தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அல்லது 15 குறள்களின் ஆழமான பொருளின் அடிப்படைகளில் நாம் செயல்பட்டோம் என்றால் வாழ்வில் மிகப்பெரிய வெற்றி பெற முடியும். அது நிறுவனங்களுக்கும் பொருந்தும். தனியார் நிறுவனங்கள் உங்கள் பகுதிகளில் இந்த திருக்குறளினுடைய தேர்ந்த கருத்துக்களை தொடர்ச்சியாக எடுத்துச் செல்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் நிறுவனத்திற்கும் உங்கள் தலைமைக்கும் நீங்கள் எந்த பகுதிகளில் நிறுவனத்தை நடத்துகிறீர்களோ அந்த பகுதிக்கும் மிகத் தேவையானதாகவும் மிகவும் பொருத்தமானதாகவும் இருக்கும். இவற்றையெல்லாம் எடுத்துக் கூறுவதன் மூலமாக திருக்குறளினுடைய கருத்துக்களை பரப்புவது என்ற பொதுவான பார்வையில் பார்க்காமல், திருக்குறளில் இருக்கும் நல்ல செய்திகளை நாம் புரிந்து கொண்டு அதன் மூலமாக நன்மையை பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். மேலும், ஒரு மாவட்ட ஆட்சித்தலைவராக எனக்கு திருக்குறள் எவ்வாறு என்னுடைய பணிக்கு பயன்படுகிறது என்பதை அனுபவப்பூர்வமாக எடுத்துக் கூறினார்.