ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Madathukulam;
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக்கோரி மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் மாநில தொழிற்சங்க அமைப்பாளர் குணசேகரன் தலைமையில் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். மடத்துக்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்களை அளவீடு செய்து இலவச வீட்டு மனை பட்டா வேண்டி விண்ணப்பித்துள்ள ஏழை எளிய மக்களுக்கு உடனடியாக வீட்டுமனை பட்டா வழங்கிட ஆவணம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். மேலும் சரியான வீடுகள் இல்லாமல் ஒரே வீட்டில் பல குடும்பங்கள் வசித்து வருவதாகவும், மேலும் சிலர் வசிப்பதற்கு இடமில்லாமல் தவித்து வருவதாகவும் ஏற்கனவே பலமுறை விண்ணப்பம் அளித்து இருந்தும் எந்த ஒரு நடவடிக்கை எடுக்காமல் சுணக்கம் காட்டுவதாக தெரிவித்தனர். மேலும் இது குறித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களும், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் மனு வழங்கினர்.