ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் அரசு பள்ளியை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் மாணவர்கள் அவதி முறையான வடிகால் வாய்க்கால் அமைக்க நகர மன்ற தலைவரிடம் மனு.
ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் அரசு பள்ளியை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் மாணவர்கள் அவதி முறையான வடிகால் வாய்க்கால் அமைக்க நகர மன்ற சாதாரண கூட்டத்தில் நகர மன்ற தலைவரிடம் செங்குந்தபுரம் வார்டு கவுன்சிலர் மனு அளித்தார்.;
அரியலூர், டிச.31- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சியில் நகர மன்ற சாதாரண கூட்டம் நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற துணைத் தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி ஆணையர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.முன்னதாக நகராட்சி பொறியாளர் ராஜகோபாலன் வரவேற்று பேசினார். மன்ற பொருட்களை நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி வாசித்தார்.தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் அத்தியாவசிய அனைத்து வாடுகளிலும் அடிப்படை பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர்.அப்போது ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட செங்குந்தபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மழை காலங்களில் பள்ளியை சுற்றிலும் மழை நீர் தேங்கி மழைநீர் வெளியே செல்ல வழி இல்லாமல் மாணவர்கள் பள்ளி உள்ளே செல்ல முடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் மழைநீர் தேக்கத்தால் பள்ளி குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகிறது மேலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் டெங்கு, மலேரியா உள்ளிட்ட தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாலும் பள்ளிக் குழந்தைகளை பாதுகாக்கும் வண்ணம் போர்க்கால அடிப்படையில் பள்ளியை சுற்றிலும் மழை நீர் தேங்காத வண்ணம் சரியான முறையான வடிகால் வாய்க்கால் அமைத்து மழை நீரை வடிகால் செய்ய நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்குந்தபுரம் வார்டு கவுன்சிலர் தங்கபாண்டியன் நகர மன்ற தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தார்.மனுவைப் பெற்றுக் கொண்ட நகர மன்ற தலைவர், துணைத் தலைவர் ஆணையர் ஆகியோர் மனுவை ஏற்று தீர்மானம் நிறைவேற்றினார்.