துாய்மை பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு தேசிய ஆணைய தலைவர் உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் துாய்மை பணியாளர்களின் மறுவாழ்வு குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேசிய துாய்மை பணியாளர்கள் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். கலெக்டர் பிரசாந்த் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் துாய்மை பணியாளர்களிடம் மாதந்தோறும் வழங்கப்படும் ஊதியம், பணி நேரம், பாதுகாப்பு உபகரணங்கள், உடற்பரிசோதனை விபரம், பணியிட பாதுகாப்பு, நலவாரிய உறுப்பினர் பதிவு, அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள், குறைகள் மற்றும் கோரிக்கை குறித்து கேட்டறியப்பட்டது.பின்னர் துாய்மை பணியாளர்களுக்கு தாமதமின்றி மாத ஊதியம் வழங்க வேண்டும். தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்ந்து வழங்க வேண்டும். நல வாரியங்களில் உறுப்பினர்களாக இணைந்து, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், துாய்மை பணியாளர்களுக்கு அரசின் அனைத்து சேவைகளும் தாமதமின்றி வழங்கப்படுவதை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.மாவட்டத்தில் உள்ள துாய்மை பணியாளர்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கை தொடர்பாக 011-24648924 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.