கடலில் விழுந்து மாயமான மீனவர் உடல்
வேளாங்கண்ணி கடற்கரையில் கரை ஒதுங்கியது
நாகை மாவட்டம் கல்லார் மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ரத்தினவேல் (42). பைபர் படகு உரிமையாளர். இவரது படகில் ரத்தினவேல், அதே ஊரைச் சேர்ந்த சித்தானந்தம் (52), ரத்தினசாமி (43) ஆகிய 3 மீனவர்கள் நேற்று முன்தினம் (30-ம் தேதி) அதிகாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். கடலில் மீன் பிடித்து விட்டு, நாகை துறைமுகம் நோக்கி 3 மீனவர்களும் கரை திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, கரை திரும்பிய மீனவர்களின் பைபர் படகு, கடலில் வீசிய பலத்த காற்று காரணமாக எழுந்த ராட்சஷ அலையில் சிக்கி நிலை தடுமாறி கவிழ்த்தது. இதில், நிலைகுலைந்த 3 மீனவர்களும் கடலில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் 3 மீனவர்களும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் இருந்த வீரர்கள், கடலில் தத்தளித்து கொண்டிருந்த ரத்தினவேல், ரத்தினசாமி ஆகிய 2 மீனவர்களையும், அவர்களது படகையும் மீட்டு காப்பாற்றி கரை சேர்த்தனர். இதில், கடலில் விழுந்த கல்லார் மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் சித்தானந்தம், கடலின் முகத்துவாரத்தில் மூழ்கி மாயமானார். அவரை, சக மீனவர்கள் மற்றும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சித்தானந்ததின் உடல் வேளாங்கண்ணி கடற்கரையில் நேற்று அதிகாலை கரை ஒதுங்கியது. தகவலறிந்த நாகை கடலோர காவல் குழும போலீசார் வேளாங்கண்ணிக்கு விரைந்து சென்று, சித்தானந்தத்தின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக நாகை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கல்லார் மீனவ கிராமத்தில், மீனவர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.