புத்தாண்டில் நண்பர்களை பைக்கில் சென்று வீட்டில் விட்டு வந்தவர் வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்தவர் லாரி டயரில் சிக்கி பலி
அரியலூர் அருகே புத்தாண்டில் நண்பர்களை பைக்கில் சென்று வீட்டில் விட்டு வந்தவர் வேகத்தடையில் நிலை தடுமாறி விழுந்தவர் லாரி டயரில் சிக்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் ஜன.1 - அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி திருச்சி மெயின் ரோட்டை சேர்ந்த முருகேசன் மகன் மாதேஷ்(26),இவரது நண்பர்கள் ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த அம்பிகாபதி மகன் ஆகாஷ்(17),தேவேந்திரன் மகன் அருள்(17) இவர்கள் 3 பேரும் சேர்ந்து வி.கைகாட்டியில் கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடி உள்ளனர். பின்னர் ஆகாஷ் அருள் ஆகியோரை அவர்களது வீட்டில் விட்டு வர மாதேஷ் பைக்கில் அழைத்து சென்றுள்ளார். அப்போது திருச்சி –சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை ரெட்டிப்பாளையம் காலனி தெருவில் உள்ள வேகத்தடையில் மாதேஷ் பைக்கில் சென்றுள்ளார். அப்போது நிலைதடுமாறி எதிரே வந்த லாரி பின் டயரில் விழுந்துள்ளார். அதில் மாதேஷ் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் மாதேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.