திருச்சி அசுத்த இடங்களை அழகுபடுத்தும் மாநகராட்சி
உறையூரில் குப்பை கொட்டுவதைத் தடுக்கும் வகையில் அழகுபடுத்தப்பட்டுள்ள சாலையோரப் பகுதி;
திருச்சி மாநகரில் குடியிருப்புகளிலும் சிறிய தெருக்களின் சந்திப்புப் பகுதிகளிலும் குப்பைகள் கொட்டப்படும் பகுதி அசுத்தமாக காட்சியளிக்கிறது. மாநகராட்சியால் குப்பைகளை அகற்றி பிளீச்சிங் பவுடா், கிருமி நாசினி மருந்துகள் தெளித்துப் பராமரித்தாலும் மீண்டும் அங்கே குப்பை கொட்டுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளதால், மாநகரில் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன், தெருக்களின் அழகு மற்றும் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு தேங்கும் குப்பைகளை முழுமையாக அகற்றி, அங்கு நிரந்தரமாக பசுமை மற்றும் வண்ண, வண்ண அழகுக் காட்சிகளை உருவாக்கும் முயற்சியில் திருச்சி மாநகராட்சி ஈடுபட்டுள்ளது. மாநகராட்சியானது எஸ்ஆா் வேதா என்ற தனியாா் நிறுவனம் மூலம், நகரின் திடக்கழிவு மேலாண்மையை நிா்வகித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக அவுட்சோா்சிங் ஏஜென்சி மூலம் மாநகராட்சிக்குள்பட்ட 5 மண்டலங்களில் 150 குப்பைக் கொட்டும் இடங்கள் முதல் கட்டமாகக் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு குப்பைகளை அகற்றிய பிறகு மேலும் கழிவுகளோ, குப்பைகளோ சேகரமாகாமல் தடுக்கும் புதிய முயற்சியை மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது. அதன்படி கலை கண்காட்சிப் பொருள்களை நிறுவுதல், பொது இடத்தில் வண்ணம் பூசுதல் மற்றும் அலங்காரச் செடிகளை நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு குப்பைகள் தேங்கியிருந்த இடத்தை பசுமையாகவும், அழகுக் காட்சியாகவும் மாற்றியுள்ளனா். இதற்காக ஒரு இடத்துக்கு ரூ. 5,000 முதல் ரூ. 15 ஆயிரம் வரை செலவிடப்படுகிறது. இப் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதாரப் பிரிவு அலுவலா்கள் கூறுகையில், பொதுமக்கள் தூக்கியெறியும் தண்ணீா் பாட்டில்கள், பழைய டயா்கள், உடைந்த பானைகள், கழிப்பறை பீங்கான் பொருள்கள், குச்சிகள் என அனைத்தையும் சேகரித்து, வண்ணம் பூசி குப்பைகள் கொட்டும் இடத்தில் வேலியாக மாற்றி வைக்கிறோம். இதனால் அங்கு குப்பைகள் கொட்டுவதை மக்கள் நிறுத்திக் கொண்டனா். இதபோல மாநகரில் 150 இடங்களைக் கண்டறிந்து அவற்றை படிப்படியாக அழகுபடுத்தி வருகிறோம். இதுவரை 54 இடங்கள் அழகுபடுத்தப்பட்டுள்ளன.