பொதுமக்கள் போராட்டம்

மதுக்கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு அதிகாரிகள் பேச்சுவார்த்தை

Update: 2025-01-03 04:22 GMT
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 5 -வது வார்டு கனி ராவுத்தர் குளம், காந்திநகர் பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை ஒட்டி தின்பண்ட விற்பனை கூடத்தில் சட்டத்திற்கு புறம்பாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். மதுக்கடை அருகே வீடு வாடகைக்கு எடுத்து அங்கு 24 மணி நேரமும் மதுபாட்டில்கள் சட்ட விரோதமாக விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதனால் அப்பகுதி மக்களுக்கும், சாலையில் செல்வோருக்கும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் கூறி இன்று காலை அந்த பகுதி சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மதுக்கடையை ஒட்டி சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வந்த இடத்தில் இருந்த மதுபாட்டில்களை கைப்பற்றினர். இதையடுத்து அந்த பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து முற்றுகை போராட்டம் நடத்தினர். இது செயல்பட்டு வரும் மது கடையால் பல்வேறு பிரச்சனைகள் குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருப்பதால் இந்த மதுபான கடையை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் வட்டாட்சியர் முத்துகிருஷ்ணன், டாஸ்மாக் துணை மேலாளர் ஜெயக்குமார் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் மதுபான கடையை மாற்றுவதற்கான நடவடிக்கை என தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Similar News