அபராதம் விதிப்பு

ஆசனூர் பகுதியில் உள்ள ஓட்டல், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2025-01-03 04:36 GMT
ஈரோடு மாவட்டம் ஆசனூர் பகுதியில் உள்ள ஓட்டல்கள் மற்றும் பேக்கரி கடைகளில் தரம் இல்லாத உணவுப் பொருட்கள் மற்றும் காலாவதியான கலப்பட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த புகாரை அடுத்து ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா உத்தரவின் படியும், உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தங்கவிக்னேஷ் அறிவுறுத்துதலின்படியும் உணவுப் பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தலைமையிலான உணவு பாதுகாப்புதுறை அலுவலர்கள் ஆசனூர் பகுதியில் உள்ள உணவகங்கள், பேக்கரி கடைகளில் ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வில் சுகாதாரமில்லாமல் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்த ஒரு உணவகத்திற்கு ரூபாய் 2000 அபராதமும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகள் பயன்படுத்திய இரண்டு கடைகளுக்கு தலா 2000 ரூபாய் வீதம் 4000 ரூபாய் அபராதமும், டீ தயாரிப்பதற்காக வைத்திருந்த கலப்பட டீ தூள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்து கீழே கொட்டி அழிக்கப்பட்டு கடைக்ககாரருக்கு 1000 ரூபாய் அபராதமும் ஆக மொத்தம் 7000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் உணவகங்களை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பயன்படுத்தக் கூடாது எனவும் சூடான சாம்பார், ரசம்,குழம்பு போன்றவற்றை பிளாஸ்டிக் கவரில் பார்சல் செய்து கொடுக்கக் கூடாது எனவும் அஜினோமோட்டோ மற்றும் செயற்கை வண்ணக் பொடிகள் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது. பேக்கரி மற்றும் மளிகை கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யக்கூடாது எனவும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக்களை பயன்படுத்தக் கூடாது எனவும் அனைத்து உணவுப் பாக்கெட் பொருள்களிலும் லேபிள், தயாரிப்பு தேதி காலாவதி தேதி பேட்ச் நம்பர் ஆகியவை கண்டிப்பாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் இல்லாமல் உணவுப் பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது எனவும் உரிமம் இல்லாத கடைகள் உடனடியாக உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

Similar News