பொங்கல் பரிசுதொகுப்பு வழங்குவதற்கான டோக்கனை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்
மயிலாடுதுறை வட்டம் மறையூர் கிராமத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் வழங்கும் பணியை மாவட்ட ஏ.பி.மகாபாரதி தொடங்கி வைத்தார்;
தமிழ்நாடு அரசு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையினை மக்கள் சிறப்பாக கொண்டாடிட ஏதுவாக இந்த ஆண்டும் பொங்கல் பரிசுத்தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு வழங்கிட ஆணையிட்டதன்பேரில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 2,83,357 குடும்ப அட்டை தாரர்களில் தகுதியுள்ளவர்களுக்கு மாவட்டத்தில் உள்ள 435 நியாயவிலைக்கடைகள் மூலம் பொங்கல் பரிசுத்தொகுப்பினை எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிட கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். நியாயவிலைக்கடைகளில் அதிக கூட்டம் சேராமல் இருக்க ஜனவரி 7- ஆம் தேதி முதல் 9 - ஆம் தேதி வரை குடும்ப அட்டைதார்கள் சார்ந்த நியாயவிலைக்கடைகள் மூலம் டோக்கன்கள் வழங்கப்பட்டு, ஜனவரி 9 ஆம் தேதி அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டவுடன், அன்றைய தினமே மயிலாடுதுறை மாவட்டத்தில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி, ஜனவரி 13-ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது. பொருள் வாங்காமல் விடுபட்டவர்களுக்கு 14 - ஆம் தேதி வழங்கப்பட உள்ளது. இந்நிகழ்வில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ்;, மாவட்ட வழங்கல் அலுவலர் உ.அர்ச்சனா, மயிலாடுதுறை வட்டாட்சியர் விஜயராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.