அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் நல மாநில பொதுக்குழு கூட்டம்
காட்பாடி அருகே அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் நல மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திருவலத்தை அடுத்த திருப்பாக்குட்டை கிராமத்தில் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் நல மாநில பொதுக்குழு கூட்டம் மற்றும் சமத்துவ பொங்கல் விழா மாநில தலைவர் வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது. மாநில செயலாளர் கயல்விழி, தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் கணேசன், வேலூர் மாநகராட்சி கவுன்சிலர் சீனிவாசன், அகில இந்திய கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கத்தின் அகில இந்திய தலைவரும், தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் நலவாரிய உறுப்பினருமான ஆர்.டி.பழனி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கட்டுமான தொழிலாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் அமைப்புசாரா கட்டுமான தொழிலாளர் சங்க கூட்டமைப்பின் அகில இந்திய தலைவர் ஆர்.டி.பழனி பேசுகையில், கட்டுமான தொழிலாளர்களுக்கு பென்ஷன் ரூ.1,200 தான் வழங்கப்படுகிறது. பல முறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அரசு ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கான கட்டுமான ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் பாதிக்கபடுகிறார்கள். கட்டுமான வாரியத்தில் ரூ.10 ஆயிரம் கோடி நிதி உள்ளது. இதற்கென தனி வங்கியை ஏற்படுத்த வேண்டும். ஓய்வூ பெற்ற தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்,என்றார்.