படிப்பறிவு இல்லாத, வயதானவர்களை குறிவைத்து ஏடிஎம் கார்டை மாற்றி பணம் கொள்ளையடித்த பழைய கில்லாடியை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைப்பு.
கொள்ளை
தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி (வயது 50). இவர் கடந்த மாத இறுதியில் இந்தியன் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கச் சென்றுள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாத நிலையில் அருகே இருந்த நபரிடம் ஏடிஎம் இயந்திரத்தில் 1000 ரூபாய் பணம் எடுத்து தரக் கூறியுள்ளார். அந்த நபரும் ஆயிரம் ரூபாய் பணம் எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த நிலையில் நான்கு நாட்களில் முனியாண்டின் வங்கிக் கணக்கில் இருந்த ஒரு லட்ச ரூபாய் பணம் எடுக்கப்பட்டுள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து முனியாண்டி வங்கி கிளையில் புகார் செய்ததோடு பெரியகுளம் வடகரை காவல் நிலையத்திலும் புகார் கொடுத்துள்ளார். முனியாண்டி கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்தியன் ஏடிஎம் இயந்திர அறையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் பெரியகுளம் வடகரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தேனி மாவட்டம் வீரபாண்டி அருகே உள்ள போடேந்திரபுரத்தைச் சேர்ந்த அழகுராஜா என்ற இளைஞர் என தெரிய வந்தது. இதனை அடுத்து அழகு ராஜாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியானது. இவர் தேனி மாவட்டத்தில் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் அறைக்கு சென்று அங்கு பணம் எடுத்து விட்டு மறந்து விட்டு செல்லப்பட்ட ஏடிஎம் கார்டுகளை முதலில் கைப்பற்றி வைத்துக் கொண்டதாகவும், அதன் பின்பு எந்த வங்கியின் ஏடிஎம் கார்டு இருக்கிறதோ அந்த ஏடிஎம் அருகே போய் நின்று கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்கத் தெரியாத படிக்காத நபர்கள் மற்றும் வயதானவர்களை குறி வைத்து பணம் எடுத்து தரக் கூறும் நபர்களிடம் ஏடிஎம் கார்டை வாங்கி பணம் எடுத்துக் கொடுத்துவிட்டு அவர் ஏற்கனவே கையில் வைத்துள்ள அந்த வங்கிக் கிளையின் வேறொரு ஏடிஎம் கார்டை கொடுத்துவிட்டு பணம் எடுக்க கொடுத்த நபரின் ஏடிஎம் கார்டை அபகரித்துக் கொண்டதாகவும், பணம் எடுக்க வந்த நபர் சென்ற பின்பு அடுத்தடுத்து தொடர்ந்து மூன்று அல்லது நான்கு நாட்களில் அந்த வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை ஏடிஎம் இயந்திரங்களின் மூலம் எடுத்துள்ளது தெரிய வந்தது. இதனை அடுத்து வழக்கு பதிவு செய்த பெரியகுளம் காவல்துறையினர் நீதிமன்றத்தில் நிறுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.