மாடுகளால் தினமும் தொல்லை உயிர் பலி நடந்தும் அலட்சியம்
குன்றத்தூர் ஸ்ரீ பெரம்பத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் உலா வரும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம்
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்துார் --- -ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையை பயன்படுத்தி தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் சிறுகளத்துார், நந்தம்பாக்கம், புதுப்பேடு, நல்லுார் பகுதி சாலைகளில் அதிக அளவில் மாடுகள் சுற்றி திரிகின்றன. மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. சிறுகளத்துாரில் சுற்றி திரிந்த மாடு ஒன்று மிரண்டு ஓடி, இருசக்கர வாகனம் மீது மோதியதில், பின்னால் அமர்ந்து பயணித்த சிங்காரி, 56, என்ற பெண் கீழே விழுந்து பலியானார். இந்த சம்பவம் நடந்த பகுதியில், நேற்றும் மாடுகள் அதிக அளவில் சுற்றி திரிந்தன. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாடுகளை வளர்ப்போர், அவற்றை வீட்டில் கட்டி வைப்பதே இல்லை. இரவு நேரத்திலும் மாடுகள் நெடுஞ்சாலையில் படுத்து உறங்குகின்றன. மாடு மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் பலியான சம்பவம் நடந்த பிறகும், இப்பிரச்னையை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாடுகளால் நெடுஞ்சாலையில் செல்வோர் அச்சமடைகின்றனர். நெடுஞ்சாலையில் திரியும் மாடுகளை பிடித்து கோ சாலையில் அடைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.