போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்களுக்கு தடை வருமா?
வாலாஜாபாத் நகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க கனரக வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு
காஞ்சிபுரம் - செங்கல்பட்டு சாலையில், வாலாஜாபாத் நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில், அறிஞர்அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி, மாசிலாமணி முதலியார் மேல் நிலைப்பள்ளி, அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ஜென்ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அமிர்தம் மெட்ரிக்குலேஷன் பள்ளி மற்றும் ஐ.டி.ஐ., தொழிற்கல்விக்கூடம் போன்றவை உள்ளன. இக்கல்விக்கூடங்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் ஆயிரக்கணக்கான மாணவ - மாணவியர்இந்த சாலை வழியாக பயணிக்கின்றனர். அந்நேரங்களில், வாலாஜாபாத் சுற்றுவட்டாரத்தில் இயங்கும் கல்குவாரி மற்றும் கிரஷர்கள் போன்ற தொழிற்சாலைகளில் இருந்து ஏராளமான கனரகவாகனங்கள் இச்சாலை வழியாக இயக்கப்படுகின்றன. மேலும், ஒரகடம், தேவரியம்பாக்கம், கட்டவாக்கம், பண்ருட்டி உள்ளிட்ட பகுதி தனியார் தொழிற்சாலைகளில் இருந்தும் தொழிலாளர்களை ஏற்றிச்செல்லும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இச்சாலைவழியாக செல்கின்றன. வாலாஜாபாத் சாலையில், கனரக வாகனம் மற்றும் தனியார் கம்பெனி பேருந்துகளின் இயக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், வாலாஜாபாத் பஜார்வீதி, வாலாஜாபாத் ரவுண்டனா மற்றும் வாலாஜாபாத் ரயில்வே மேம்பாலம் வழி சாலைகளில், காலை, மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், காலைமற்றும் மாலை நேரங்களில் பள்ளிக்கு சென்று வரும் மாணவ - மாணவியர்மற்றும் பாதசாரிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, வாலாஜாபாத் சாலையில், மாணவர்கள் பள்ளிக்கு சென்று வரும், காலை மற்றும் மாலை நேரத்தில் கனரக வாகனங்களுக்கு தடை விதிக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.