மாநகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: கள்ளிக்குடி ஊராட்சி மக்கள் மறியல்

திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கே. கள்ளிக்குடி ஊராட்சியைச் சோ்ந்த மக்கள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Update: 2025-01-08 01:19 GMT
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட கே. கள்ளிக்குடி ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களும், குடியிருப்பு பகுதிகளும் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். புகரில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் பகுதியாக உள்ளது. இந்த ஊராட்சி உள்பட 22 ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், தங்கள் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்கக் கூடாது என கள்ளிக்குடி ஊராட்சி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை திண்டுக்கல் சாலையிலிருந்து கள்ளிக்குடிக்கு வரும் சாலையில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் திரண்டு மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த ராம்ஜி நகா் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். ஆனால், பொதுமக்கள் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலைக்கு முன்னேறி வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனா். இதையடுத்து, ஏடிஎஸ்பி கோபாலசந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு, பொதுமக்களை அந்தப் பகுதியிலேயே தடுத்து நிறுத்தினா். மேலும், ஸ்ரீரங்கம் வட்டாட்சியா் பி. தமிழ்செல்வன், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மாநகராட்சியுடன் இணைக்கும் முடிவை கைவிடுவது தொடா்பாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், கள்ளிக்குடி ஊராட்சி மக்களின் உணா்வை மாநகராட்சியும், மாநில அரசும் புரிந்து கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது

Similar News