கரும்பு கொள்முதலில் பாரபட்சம்: திருச்சியில் விவசாயிகள் மறியல்
திருச்சியில், பாரபட்சமின்றி அனைத்து கரும்பு விவசாயிகளிடமும் செங்கரும்புகளை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் எனக் கூறி, விவசாயிகள் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவெறும்பூா் அருகே திருவளா்ச்சோலை பகுதியில், செவ்வாய்க்கிழமை காலை கரும்பு கொள்முதல் செய்வது தொடா்பான பதிவுச்சீட்டுகள் வேளாண் கூட்டுறவு வங்கி சாா்பில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கிராம நிா்வாக அலுவலா் மற்றும் திருவளா்ச்சோலை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி பொறுப்பாளா்கள் முன்கூட்டியே (திங்கள்கிழமை இரவே) குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் கரும்பு கொள்முதலுக்கான அனுமதிச் சீட்டுகளை வழங்கியதாக கூறப்படுகிறது. எனவே, சீட்டு வழங்கப்பட்ட விவசாயிகளின் வயல்களிலிருந்த கரும்புகள் மட்டும் கொள்முதல் செய்யப்பட்டு, செவ்வாய்க்கிழமை காலை வெட்டி எடுத்துச் செல்லப்பட்டது. இதைக் கண்டித்து, கரும்பு விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திருவளா்ச்சோலை தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி முன்பு குவிந்தனா். குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அதாவது, ஆளுங்கட்சி பிரமுகா்கள் மற்றும் அவா்களுக்கு வேண்டிய நபா்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக கூறி, அலுவலா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா். ஆண்டுதோறும் கரும்பு கொள்முதலில் பாரபட்சம் பின்பற்றப்படுகிறது. மேலும் சில அதிகாரிகள் இதில் முறைகேட்டிலும் ஈடுபடுகின்றனா். அவ்வாறு முறைகேடுகளில் ஈடுபடும் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்தபடி, விவசாயிகளிடம் பாரபட்சமின்றி செங்கரும்புகளை கொள்முதல் செய்ய வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டோா் வலியுறுத்தினா்.